துணை ஆணையாளர் ஸ்வேதா சுமன் 
தமிழக செய்திகள்

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை: சென்னை மாநகராட்சி துணை ஆணையாளர்கள் ஆய்வு

மழைநீர் வடிகால்கள், வண்டல் வடிகட்டி தொட்டிகள் மற்றும் கால்வாய்களில் தூர்வாரும் பணிகளை விரைந்து மேற்கொள்ள அலுவலர்களுக்கு துணை ஆணையாளர் கௌஷிக் அறிவுறுத்தினார்.

சென்னை,

சென்னை மாநகராட்சி பகுதிகளில் வட்டார துணை ஆணையாளர்கள் வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு, மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சிப் பணிகளை இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

ஆய்வு

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வட்டார துணை ஆணையாளர்கள் வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு, மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சி பணிகளை இன்று (27.10.2026) பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

முதல்வர் படைப்பகம்

வடக்கு வட்டார துணை ஆணையாளர் ஸ்வேதா சுமன், சென்னை மாநகராட்சி, தண்டையார்பேட்டை மண்டலம், வார்டு-38க்குட்பட்ட கருணாநிதி நகரில் கட்டப்பட்டு வரும் சமுதாயக் கூடம், வார்டு-42க்குட்பட்ட டி.எச். சாலையில் கட்டப்பட்டு வரும் முதல்வர் படைப்பகம், தண்டையார்பேட்டை, தொற்று நோய் மருத்துவமனையில் கட்டப்பட்டு வரும் தங்கும் விடுதி உள்ளிட்டவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்து, கட்டுமான பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

முன்னெச்சரிக்கை பணி

மத்திய வட்டார துணை ஆணையாளர் கௌஷிக், சென்னை மாநகராட்சி, அண்ணாநகர் மண்டலம், வார்டு-105க்குட்பட்ட அரும்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலையம் அருகில், வார்டு-106க்குட்பட்ட தமிழர் வீதி பகுதி, கண்ணகி நகர், காமராஜர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விருகம்பாக்கம் கால்வாயில் நீர் சீராக செல்வதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணி, அவ்வை நகர் மேற்கு தெருவில் மழைநீர் தேங்கும் தாழ்வான பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை பணி ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்து, மழைநீர் வடிகால்கள், வண்டல் வடிகட்டி தொட்டிகள் மற்றும் கால்வாய்களில் தூர்வாரும் பணிகளை விரைந்து மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

ஆக்கிரமிப்பு

தெற்கு வட்டார துணை ஆணையாளர் அதாப் ரசூல், சென்னை மாநகராட்சி, சோழிங்கநல்லூர் மண்டலம், வார்டு-194க்குட்பட்ட ஈஞ்சம்பாக்கம், எம்.கே. இராதா அவென்யூ பகுதியில் உள்ள திறந்தவெளி நிலத்தில் ஆக்கிரமிப்பு தொடர்பாக நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வுகளின்போது மண்டல அலுவலர்கள், செயற் பொறியாளர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT