சென்னை,
வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநகராட்சி ஆணையாளர் சமீரன், இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
வடகிழக்குப் பருவமழை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால்வாய்கள், வண்டல் வடிகட்டித் தொட்டிகள், ஏரிகள் மற்றும் குளங்களில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, இன்று மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், பெருநகர சென்னை மாநகராட்சி, ராயபுரம் மண்டலம், வார்டு-61க்குட்பட்ட எழும்பூர் நெடுஞ்சாலையில் உள்ள வண்டல் வடிகட்டித் தொட்டி மற்றும் மழைநீர் வடிகால்வாய்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணியினைப் பார்வையிட்டு ஆய்வு செய்து, மீதமுள்ள மழைநீர் வடிகால்கள் மற்றும் வண்டல் வடிகட்டித் தொட்டிகளிலும் தூர்வாரும் பணிகளை மேற்கொண்டு பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது, கண்காணிப்புப் பொறியாளர் சொக்கலிங்கம் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.