தமிழக செய்திகள்

மது குறைவாக கொடுத்ததால் வடமாநில தொழிலாளி அடித்துக் கொலை: 5 மணி நேரத்தில் 4 பேர் கைது

வடமாநில தொழிலாளி ஒருவர் தூத்துக்குடியைச் சேர்ந்த 4 பேருடன் மது அருந்திக் கொண்டிருந்தபோது, மதுபானத்தைக் குறைவாக பகிர்ந்து கொடுத்ததாக கூறி அவர்களுக்குள் திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி 3-ம் மைல் புதிய துறைமுகம் பைபாஸ் ரோடு அருகே மது போதையில் ஏற்பட்ட தகராறில் ஜார்கண்ட் மாநில தொழிலாளி மரக்கட்டையால் அடித்துக் கொலை செய்த வழக்கில், தொடர்புடைய 4 குற்றவாளிகளை 5 மணி நேரத்திற்குள் தென்பாகம் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

ஜார்கண்ட் மாநில தொழிலாளி:

ஜார்கண்ட் மாநிலம், பலாமு மாவட்டம், பொல்பெல் கிராமத்தைச் சேர்ந்த கிர்ஜா சிங் மகன் ராஜேஷ் குமார் சிங் (வயது 40). இவர் தூத்துக்குடியில் தங்கி வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்ததும், ராஜேஷ் குமார் சிங் மற்றும் தூத்துக்குடியைச் சேர்ந்த 4 பேர் என மொத்தம் 5 பேரும் தூத்துக்குடி- மதுரை புதிய துறைமுகம் பைபாஸ் ரோட்டில் உள்ள ஒரு மதுபானக் கடையில் மது வாங்கியுள்ளனர். பின்னர் அங்கிருந்து அருகில் உள்ள ஆள்நடமாட்டமில்லாத முள்செடிகளுக்கு நடுவே அமர்ந்து அனைவரும் ஒன்றாக மது அருந்தியுள்ளனர்.

மதுபானம் குறைவாக கொடுத்ததில் வாய்த்தகராறு:

மது அருந்திக் கொண்டிருந்தபோது, தங்களுக்குள் மதுபானத்தைக் குறைவாக பகிர்ந்து கொடுத்ததாக கூறி அவர்களுக்குள் திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த அந்த 4 பேரும் சேர்ந்து, அருகில் கிடந்த மரக்கட்டைகளை எடுத்து ராஜேஷ் குமார் சிங்கின் தலையில் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அந்த வடமாநில தொழிலாளி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

கொலை செய்த பின்னர் 4 பேரும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, வடமாநில தொழிலாளியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

5 மணி நேரத்திற்குள் 4 பேர் கைது:

வடமாநில தொழிலாளி கொலை வழக்கில் தூத்துக்குடி ராஜ் வள்ளினாயகபுரம் 3-வது தெருவைச் சேர்ந்த சிவபாலமுருகன்(23), ராஜகோபால் நகர் 1-வது தெருவைச் சேர்ந்த தங்கராஜ் மகன் ஜேம்ஸ்(25), தேவகி நகர் ராஜீவ் நகர் பாலம் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் பூமி(24) மற்றும் பாளையங்கோட்டை ரோடு 3-ம் மைல் 3-வது தெருவைச் சேர்ந்த ஜபருதீன் மகன் இமாம் காசாலி(26) ஆகிய 4 பேரையும் கொலை சம்பவம் நடந்த 5 மணி நேரத்திற்குள் விரைந்து சென்று தென்பாகம் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.