திருநெல்வேலி,
திருநெல்வேலி மாவட்டத்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வடமாநில வாலிபர் சி.சி.டி.வி. கேமரா மூலம் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் உட்கோட்டம், ராதாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 25.8.2026 அன்று அதிகாலை வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக பெறப்பட்ட புகாரின் பேரில், வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
சம்பவத்தன்று அதிகாலை சிறுமி அழுததையடுத்து, பெற்றோர் சிறுமியிடம் விசாரித்தபோது, வீட்டிற்குள் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நுழைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. பின்னர் சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேற்சொன்ன சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில், வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
வழக்கின் ஆரம்ப கட்டத்தில் எதிரியின் அடையாளம் தெரியாத நிலையில், வள்ளியூர் உட்கோட்ட டி.எஸ்.பி. வெங்கடேஷ், ராதாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர், வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மற்றும் பணகுடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் தலைமையில் பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அப்பகுதி பொதுமக்களிடம் முதற்கட்ட விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
மேலும், சம்பவம் நடைபெற்ற இடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சி.சி.டிவி. (CCTV) கேமரா பதிவுகள் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டன. அதில், சம்பவம் நடைபெற்ற நேரத்தில் வீட்டின் பின்புறம் வழியாக சுமார் 25 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சென்றது தெரியவந்தது. சி.சி.டி.வி. பதிவுகள் மற்றும் காவல்துறையினரின் தொடர் விசாரணையின் அடிப்படையில், குற்றவாளியின் அடையாளம் கண்டறியப்பட்டது.
அதைத் தொடர்ந்து, மேற்சொன்ன வழக்கின் குற்றவாளியான மேற்கு வங்காள மாநிலம், கூச் பெஹார் மாவட்டம், பக்சிகஞ்ச் பகுதியைச் சேர்ந்த கௌரங்கா ராய் மகன் சூரஜ்தேவ்ராய் (வயது 27) என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.
மேற்சொன்ன வழக்கில் துரிதமாக செயல்பட்டு சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை தொடர்ந்து ஆய்வு செய்து, குற்றவாளியின் அடையாளத்தை கண்டறிந்து குற்றவாளியை கைது செய்த வள்ளியூர் உட்கோட்ட டி.எஸ்.பி. வெங்கடேஷ், ராதாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர், வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாரை, திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. விஸ்வேஸ் பாலசுப்பிரமணியம் சாஸ்திரி பாராட்டினார். மேற்சொன்ன வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.