தமிழக செய்திகள்

ரெயிலில் 3 கிலோ கஞ்சா கடத்தல்: வடமாநில வாலிபர் கைது

முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் போலீசார் மேற்கொண்ட ஆய்வின்போது சந்தேகப்படும்படியாக இருந்த வடமாநில வாலிபர் ஒருவரின் பையை சோதனை செய்தனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் 3 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த வடமாநில வாலிபரை ரெயில்வே போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

சோதனை

சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் கடந்த 20-ந்தேதி சென்னையில் இருந்து புறப்பட்டு வந்தது. இந்த ரெயில் மதுரையை கடந்து வந்தபோது, நெல்லை ரெயில்வே போலீசார் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, முன்பதிவு இல்லாத பெட்டியில் சந்தேகப்படும்படியாக இருந்த வடமாநில வாலிபரின் பையை சோதனை செய்தனர்.

3 கிலோ கஞ்சா பறிமுதல்

ரெயில்வே போலீசார் மேற்கொண்ட சோதனையின்போது, அந்த பையில் 3 கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் அந்த வாலிபரை பிடித்து தூத்துக்குடி ரெயில்வே போலீசில் ஒப்படைத்தனர். தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் பீகார் மாநிலம், பஹால்பூரை சேர்ந்த கவுதம்குமார் (வயது 20) என்பதும், அவர் பீகாரில் இருந்து, தூத்துக்குடியில் தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேருவதற்காக வந்ததும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து பிடிபட்ட கவுதம்குமார் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை தூத்துக்குடி போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசில் ஒப்படைத்தனர். அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.