வேலூர் மாவட்டம், காட்பாடி காந்திநகரில் உள்ள தனது இல்லத்தில் தி.மு.க., பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;
பருவமழை தொடர்பாக த.வெ.க அரசு எவ்வளவு பாதுகாப்பு செய்திருந்தாலும் கட்டுக்கடங்காத மழை வந்தால் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் அதனை கட்டுப்படுத்தும் அளவிற்கு நிர்வாகத்தை செய்ய வேண்டும். அதுதான் முறை. இந்த ஆட்சியில் அனைத்துமே மறைமுகமாக உள்ளது. எதுவுமே வெளிப்படை தன்மையோடு இல்லை. இது ஒரு மர்மமான அரசாங்கமாக உள்ளது.
சட்டம் ஒழுங்கு கொஞ்சம் கூட கிடையாது. காரணம் போலீசாரிடம் சரியான அணுகுமுறை உள்ளதா என தெரியவில்லை. ஆளும் கட்சியினர் தான் அதிக போதைப்பொருள் வைத்திருப்பதாக பத்திரிகைகளில் பார்க்கிறோம். ஆளும் கட்சிக்கு கொஞ்சம், கொஞ்சமாக பயம் விட்டு போய்விட்டது. நாம் தான் ஆளும் கட்சி. நம்மை ஒன்றும் செய்ய முடியாது என்ற நிலைக்கு வந்து விட்டார்கள். அதனுடைய விளைவு, சட்டம் ஒழுங்கு கெட்டுப் போய்விட்டது அதைப் பற்றி இவர்கள் கவலைப்படவில்லை.
புதிய அரசு ஆட்சிக்கு வந்த பிறகு தான் சென்னையில் மழை வெள்ளம் விரைவாக வடிகிறது. அதற்கு நாங்கள் எடுத்த நடவடிக்கையே காரணம் என அமைச்சர்கள் கூறுகிறார்கள்.இவர்கள் ஒரு மண்வெட்டி மண்ணை கூட எடுக்கவில்லை. இன்றைக்கு சென்னையில் ஓரளவுக்கு வெள்ளம் வடிந்துள்ளது என்றால் அது நாங்கள் செய்து விட்டுப் போன பணிகளால் தான்.
எஸ்ஐஆரை ஆரம்பத்தில் இருந்து எதிர்த்தது நாங்கள்தான். அன்றைக்கு எல்லாம் இவர்கள் எதிர்க்க வில்லை. ஒன்றும் இல்லை. காங்கிரஸ் எல்லாம் நமத்து போன சமாச்சாரம், அந்த கட்சியை பேசாமல் இருப்பதே நல்லது. இந்த ஜென்மத்தில் ஆட்சிக்கு வராது. தமிழ்நாட்டில் 2 நடிகர்கள் புதியதாக அரசியல் நோக்கத்தில் நிகழ்ச்சிகளை நடத்தி வருவதாக கேட்கிறீர்கள்.ஒருவன் இளநீர் கடை வைத்தால் நன்றாக போனால் அதே போன்று மற்றவர்களும் வைப்பார்கள்.
அது போன்று தான் இது. இதெல்லாம் நிற்காது. ஏதோ எம்.ஜி.ஆர்., ஜோசப் விஜய் போன்று மற்றவர்கள் ஆகிவிட முடியாது.தமிழ்நாட்டில் அரிசிக்கு இப்படி ஒரு பஞ்சம் வந்ததை நான் கேள்விப்படவில்லை. மின்சாரம், அரிசி, சட்டம் ஒழுங்கு எதையாவது ஒன்றில் இவர்கள் உருப்படியாவது செய்துள்ளார்களா? இவர்கள் விளங்காதவர்கள். இவ்வாறு அவர் கூறினார்.