தமிழக செய்திகள்

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள 2 ஆயிரம் டாஸ்மாக் ஊழியர்களுக்கு நோட்டீஸ்

வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை,

டாஸ்மாக் பணியாளர்களுக்கு சமீபத்தில் தமிழக அரசு சம்பள உயர்வை அறிவித்தது. இதனால், நீண்டகாலமாக பேசப்பட்டு வந்த கூடுதல் வசூல் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சென்னை உள்பட பல்வேறு பகுதிகளிலும் மீண்டும் கூடுதல் வசூல் குறித்த புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

கூடுதல் விலைக்கு மது விற்றால் நடவடிக்கை கூடுதல் விலைக்கு மது விற்கும் பணியாளர்கள் இடை நீக்கம் செய்யப்படுவார்கள் என மதுவிலக்குத் துறை அமைச்சர் விக்னேஷ் அறிவித்தார். ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாகும் பணியாளர்களின் விவரம் அவர்களின் பணிப் பதிவேட்டில் பதிவாகும். கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பது முதன்முறை கண்டறியப்பட்டால் ஒரு மாதம் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.

அதே போல், கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது 2-வது முறையாக கண்டறியப்பட்டால் 3 மாதம் பணியிடைநீக்கம் செய்யப்படுவார்கள். 3-வது முறையாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் சஸ்பெண்ட் செய்யப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டு விசாரணை நடத்தப்படும். 3-வது முறையாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது உறுதி செய்யப்பட்டால் நிரந்தர பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

எனினும் சில இடங்களில் முறை​கேடு​கள் தொடர்ந்​தன. கூடு​தல் வசூல் தொடர்​பான புகார்​களை பொதுமக்​கள் எளி​தில் தெரிவிக்க, தமிழக அரசு அண்​மையில் பிரத்​யேகப் புகார் சேவை மையத்​தைத் தொடங்​கியது. இந்த மையத்​துக்கு வந்த ஏராள​மான புகார்​களை ஆய்வு செய்த அதி​காரி​கள், கள சோதனை​யில் ஈடுபட்​டனர்.

இந்நிலையில், நேற்று முன்​தினம் முதல்கட்​ட​மாக 67 டாஸ்​மாக் ஊழியர்​கள் பணி​யிடை நீக்​கம் செய்​யப்​பட்​டனர். அதன் தொடர்ச்​சி​யாக நேற்று மேலும் 150 ஊழியர்​கள் பணி​யிடை நீக்​கம் செய்​யப்​பட்​டுள்​ளனர் கடந்த 2 நாட்​களில் மட்​டும் 217 பேர் மீதான இந்த அதிரடி நடவடிக்​கை, டாஸ்​மாக் ஊழியர்கள் மத்​தி​யில் பெரும் அதிர்ச்​சி​யை​ ஏற்படுத்​தி​ய நிலையில், ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து டாஸ்மாக் ஊழியர்கள் ஆங்காங்கே வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் சுமார் 2 ஆயிரம் டாஸ்மாக் ஊழியர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் கேள்வி எழுப்பப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டிருக்கிறது. சம்பள உயர்வு மற்றும் இதர செலவுகளுக்கு அரசே பணம் தரும் நிலையில், வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்றும், இல்லையென்றால் சஸ்பெண்ட் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்து நோட்டீஸ் அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT