தமிழக செய்திகள்

நெல்லையில் பிரபல ரவுடி சரமாரி வெட்டிக்கொலை: நண்பர்கள் வெறிச்செயல்

பிரபல ரவுடி சாம் பிரபாகர் மீது 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

நெல்லை,

நெல்லை பாளையங்கோட்டை எம்.கே.பி. நகரைச் சேர்ந்தவர் டேவிட் ராஜ். இவருடைய மகன் சாலமன் சாம் பிரபாகர் (வயது 34). இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். சாலமன் சாம் பிரபாகர் மீது 3 கொலை வழக்குகள், 2 கொலை முயற்சி வழக்குகள் உள்பட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

எனவே இவரது பெயரை பாளையங் கோட்டை போலீசார் ரவுடி பட்டியலில் சேர்த்து கண்காணித்து வந்தனர். நேற்று இரவில் சாலமன் சாம் பிரபாகர் தனது வீட்டின் முன்பாக நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு அவருடைய நண்பர்கள் 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் சாலமன் சாம் பிரபாகரனிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

வெட்டிக்கொலை

அப்போது அவர்களுக்கு இடையே திடீரென்று தகராறு ஏற்பட் டது. இதில் ஆத்திரமடைந்த நண்பர்கள் 2 பேரும் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சாலமன் சாம் பிரபாகரனை சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்சய், பாளையங்கோட்டை இன்ஸ்பெக்டர் முத்து கணேஷ், நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

கொலை செய்யப்பட்ட சாலமன் சாம் பிரபாகரனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நண்பர்களுக்கு வலைவீச்சு

நெல்லை நகர் முழுவதும் போலீசார் உஷார் செய்யப்பட்டு தலைமறைவான நண்பர்கள் 2 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள். பாளையங்கோட்டையில் இரவில் ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

SCROLL FOR NEXT