தமிழக செய்திகள்

தமிழகத்தில் ரேஷன் கார்டுதாரர்கள் எண்ணிக்கை 2.30 கோடியாக உயர்வு

ஜூலை 31-ந்தேதி முதல் இதுவரை 1.16 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

சென்னை,

தமிழகத்தில் ரேஷன் கார்டுதாரர்களின் எண்ணிக்கை 2.30 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த குடும்ப அட்டைகளில் மொத்தம் 7.02 கோடி உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர்.

குடும்ப அட்டை

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுகளை உணவுப் பொருள் வழங்கல் துறை வழங்கி வருகிறது. இதற்காக ஆதார் எண்ணுடன் பொது வினியோகத் திட்ட இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். மாதந்தோறும் சராசரியாக 50 ஆயிரம் பேர் புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்து வந்த நிலையில், அவர்களில் 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் பேருக்கு கார்டுகள் வழங்கப்பட்டு வந்தன.

இதற்கிடையே, கடந்த 2023-ம் ஆண்டு பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தில் பயன்பெறுவதற்காக, ஒரே குடும்பத்தில் திருமணமாகி ஒன்றாக வசித்து வந்த பலரும் தனித்தனியாக ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தனர். இதனால் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணியில் தாமதம் ஏற்பட்டது.

மேலும், ரேஷன் கார்டு விண்ணப்பங்களை உணவுப் பொருள் வழங்கல் துறை மட்டுமின்றி, தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படும் மின் ஆளுமை முகமை மூலமாகவும் ஆய்வு செய்யும் நடைமுறை கொண்டுவரப்பட்டது. இதன் காரணமாக விண்ணப்பித்த உடனேயே ரேஷன் கார்டுகள் வழங்கப்படுவதில்லை. பல மாதங்களுக்கு முன்பு விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களுக்கு தற்போது குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

புதிய கார்டுகள்

கடந்த 2025-ம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி தமிழகத்தில் 2.25 கோடி ரேஷன் கார்டுதாரர்கள் இருந்தனர். ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இந்த எண்ணிக்கை 2.30 கோடியாக அதிகரித்துள்ளது.

கடந்த ஜூலை 31-ந்தேதி முதல் இதுவரை 1.16 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தமிழகத்தில் ரேஷன் கார்டுதாரர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT