நெல்லை,
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே ஊர்மேலழகியான் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகப்பிரியா (20 வயது). இவர் நெல்லை சந்திப்பில் உள்ள தனியார் கண் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வந்தார். அவர் அங்குள்ள விடுதியில் தங்கி இருந்தார். நேற்று முன்தினம் சண்முகப்பிரியா தான் தங்கியிருந்த அறையில் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி தகவல் அறிந்த நெல்லை சந்திப்பு போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில், தன்னுடன் தங்கி இருந்த தோழி பேசாத மன வருத்தத்தில் அவர் தற்கொலை செய்தது தெரிய வந்தது. அவரும், தேனி மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண்ணும் பள்ளி பருவம் முதலே ஒன்றாக படித்தனர். தற்போது இந்த மருத்துவமனையிலும் ஒன்றாகவே பணிபுரிந்தனர். இருவரும் மிக நெருங்கிய தோழிகளாக இருந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அவரிடம், தோழி சரியாக பேசவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் மன வருத்தத்தில் இருந்த அவர், "நீ என்னிடம் பேசவில்லையென்றால் நான் இறந்து விடுவேன்" என்று அடிக்கடி கூறி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 1-ந்தேதி அன்று அவரது மனநிலை குறித்து அந்த மருத்துவமனை நிர்வாகம் மற்றும் தோழிகள் தரப்பிலிருந்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் அவர் தற்கொலை செய்வதற்கு முன்னதாக எழுதிய உருக்கமான கடிதம் போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. அதில், "நான் உன்னை என் உயிராக மதித்தேன். நீ என்னிடம் பேச வேண்டும் என்பதற்காகவே காத்திருந்தேன். ஆனால் நீ என்னிடம் பேசவில்லை. என்மேல் உனக்கு பாசம் இல்லை. அதனால் நான் உன் மீது சத்தியம் செய்து இந்த முடிவை எடுக்கிறேன். எனக்காக ஒரு சொட்டு கண்ணீர் விடு" என்று உருக்கமாக எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதற்கிடையே அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி, குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் நேற்று காலையில் திரண்டு சாலை மறியல் செய்ய முயன்றனர்.
உடனே போலீஸ் உதவி கமிஷனர் சரவணன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களிடம் நடந்த சம்பவங்களை எடுத்து கூறி அவர்களை கலைந்துபோக செய்தனர். இதையொட்டி சந்திப்பு பேருந்து நிலையம், கண் மருத்துவமனை வளாக பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.