சென்னை,
செவிலியர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் வரும் 18-ந்தேதி ஆர்பாட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சுபின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் கடந்த காலங்களில் செவிலியர் பணியிடங்கள் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் தேர்வின் அடிப்படையில் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட்டு நிரப்பப்பட்டு வந்தது. இந்த நடைமுறையை மாற்றி தமிழ்நாடு அரசு தற்போது மாவட்ட நிர்வாகம் மூலம் 11 மாத ஒப்பந்த முறையில் ரூ.21 ஆயிரம் மாத ஊதியத்தில் தற்காலிகமாக செவிலியர்களை பணியமர்த்த முடிவு செய்துள்ளது. இதன் மூலம் 4,724 செவிலியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கடந்த 2022-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு செவிலியர்களை பணி நிரந்தரம் செய்வதை தவிர்க்க இந்த திட்டத்தை நிறைவேற்ற முடிவு செய்தது. அதன் அடிப்படையில் முதல் கட்டமாக எம்.ஆர்.பி. தேர்வு மூலம் கொரோனா காலகட்டத்தில் பணியமர்த்தப்பட்ட சுமார் 2,500 செவிலியர்களை எந்த முன்னறிவிப்பும் இன்றி 31.12.2026 அன்று பணி நீக்கம் செய்தது. பணி நீக்கம் செய்த போது எம்.ஆர்.பி. மூலம் நிரப்பப்பட வேண்டிய சுமார் 2,000 பணியிடங்கள் காலியாகவே இருந்தது. இதனை தொடர்ந்து 10.1.2026 அன்று எம்.ஆர்.பி. மூலம் நிரப்பப்பட வேண்டிய அந்த பணியிடங்களை மாவட்ட நிர்வாகம் மூலம் 11 மாத தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப அரசாணை வெளியிடப்பட்டது. செவிலியர்களை நிரந்தரம் செய்யக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே அரசு இந்த முடிவை மேற்கொண்டது.
கொரோனா காலத்தில் பணி அமர்த்தப்பட்டு பணி நீக்கம் செய்யப்பட்ட செவிலியர்களுக்கு மீண்டும் பணி வழங்கவும் நிரந்தர முறையில் செவிலியர்களை பணியமர்த்தவும் சங்கம் தொடர்ச்சியாக போராட்டங்களை நடத்தியது. அதனை தொடர்ந்து தற்காலிக பணியமர்வு அரசாணையை ரத்து செய்து ஏற்கனவே இருந்த நடைமுறையை பின்பற்ற கோரி வேலைக்காக காத்துக்கொண்டிருந்த செவிலியர்கள் நீதிமன்றத்தை நாடி இடைக்கால தடை உத்தரவை பெற்றனர்.
எனினும் அரசு விடாப்பிடியாக தற்காலிக முறையில் மட்டுமே பணியமர்வு செய்ய முடியும் என கோரி வழக்கை நடத்தியது. கிட்டத்தட்ட மூன்றரை ஆண்டுகள் காலியாக இருந்த பணியிடங்களை நிரப்பாமல் வழக்கை மட்டுமே நடத்தி வந்தது. இந்த காலகட்டத்தில் காலியாக 4,700 பணியிடங்கள் வரை இருந்தும் பொதுமக்கள் மீது எந்த அக்கரையும் இல்லாத இந்த அரசு, பணியிடங்களை நிரப்பாமலே இருந்து வந்துள்ளது. கடந்த 10.9.2026 அன்று நடைமுறைக்கு மாறாக தற்காலிக பணியமர்வு செய்யும் அரசாணைக்கு விதிக்கப்பட்ட தடையினை நீதிமன்றம் விலக்கிய நிலையில் அதற்கு மறுநாளே 4,724 செவிலியர்களை தற்காலிகமாக பணியமர்த்தும் அறிவிப்பை மருத்துவ துறை வெளியிட்டுள்ளது.
இந்த நிகழ்வுகளை பார்க்கும்போது அரசின் கொள்கை முடிவுகள் பொது மக்கள் மீதோ, படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்கள் மீதோ சிறிதும் அக்கரை இல்லாமலும், ஊழியர்களின் உழைப்பை சுரண்டுவதுடன் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய அடிப்படை உரிமைகளை கூட பறிக்கும் நோக்கிலும் தான் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஏற்கனவே அரசு மருத்துவமனைகளில் படுக்கை எண்ணிக்கைக்கு ஏற்ப செவிலியர்கள் எண்ணிக்கை இல்லாமல் 4 பேர் இருக்க வேண்டிய இடத்தில் ஒருவர் மட்டுமே இருந்து மருத்துவ பயனாளர்களை கவனிக்க வேண்டிய நிலை ஒரு புறம் இருக்க, அரசின் இந்த ஊழியர் விரோத கொள்கையை நிறைவேற்ற பல ஆயிரம் காலி பணியிடங்களை கிட்டத்தட்ட 3.5 ஆண்டுகள் நிரப்பாமலே இருந்து வந்தது என்பது ஏழை எளிய மக்கள் மீது துளி அளவும் அரசுக்கு அக்கறை இல்லை என்பதை காட்டுகிறது.
சேவை துறையாக இருக்கும் மருத்துவ துறையை நம்பி பல கோடி மக்கள் வாழ்ந்து வரும் நிலையில் மருத்துவம் மற்றும் பொது சுகாதார துறை நிரந்தர தன்மையுடன் தொடர்ந்து செயல்பட வேண்டுமானால் துறையில் அனைத்து ஊழியர்களும் நிரந்தர தன்மையுடன் பணியமர்த்தப்பட வேண்டும்.
ஆகவே இந்த துறையை காப்பாற்ற வேண்டிய கடமை துறையில் பணி செய்யும் ஊழியர்களுக்கு உள்ளது என்ற அடிப்படையில் வருகிற 18.9.2026 அன்று தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலகங்கள் முன்பும் பெருந்திரள் ஆர்பாட்டம் நடத்துவது என்று நேற்று (12.9.2026) காணொலி மூலம் நடைபெற்ற சங்கத்தின் மாநில செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.