கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த மு.க.ஸ்டாலினுக்கு நன்றி - ஓ.பன்னீர்செல்வம்

வெற்றி பெறச் செய்த போடிநாயக்கனூர் தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கு கோடானு கோடி நன்றி என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் நடந்து முடிந்த 17-வது சட்டசபை தேர்தலில், கருத்து கணிப்புகளை தவிடுபொடியாக்கி, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் அதிக இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது. ஆட்சி அமைக்கும் வகையில் பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்களில், த.வெ.க.வுக்கு 108 இடங்கள் கிடைத்துள்ளன. அதேபோல், தி.மு.க. கூட்டணிக்கு 73 இடங்களும், அ.தி.மு.க. கூட்டணிக்கு 53 இடங்களும் கிடைத்துள்ளன.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெற்றி பெற்றுள்ளார். இந்த நிலையில் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

அண்மையில் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கான பொதுத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட எனக்கு வாய்ப்பளித்து, எனது வெற்றிக்காக தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்ட திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும், தமிழ்நாடு முதல்-அமைச்சருமான மு.க. ஸ்டாலினுக்கு எனது நெஞ்சம் நிறைந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதேபோன்று, எனது வெற்றிக்காக தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட திராவிட முன்னேற்றக் கழக இளைஞர் அணித் தலைவரும், தமிழ்நாடு துணை முதல்-அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினுக்கும்; தேர்தல் பணியாற்றிய தேனி மாவட்டக் கழகப் பொறுப்பாளரும், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான தங்கத் தமிழ்ச்செல்வனுக்கும்; மாவட்டக் கழக நிர்வாகிகளுக்கும், ஒன்றியக் கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கும்; நகரக் கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கும்; பேரூர் கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கும்; ஊராட்சிக் கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கும்; கிளைக் கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கும்; சார்பு அணி நிர்வாகிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மெய் வருத்தம் பாராமல், பசி நோக்காமல், கண் துஞ்சாமல், 'கருமமே கண்ணாயினார்' என்பதற்கேற்ப, ஓயாமல் அல்லும் பகலும் அயராது உழைத்த திராவிட முன்னேற்றக் கழக உடன் பிறப்புகளுக்கும்; மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சி தலைவர்களுக்கும்; நிர்வாகிகளுக்கும்; தொண்டர்களுக்கும்; என்னை வெற்றி பெறச் செய்த போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கும் எனது கோடானு கோடி நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.