தமிழக செய்திகள்

போடிநாயக்கனூர் தொகுதி வேட்பாளராக தேர்வு செய்த மு.க.ஸ்டாலினுக்கு நன்றி - ஓ.பன்னீர்செல்வம்

வாக்களித்த போடிநாயக்கனூர் தொகுதி வாக்காளப் பெருமக்கள் என அனைவருக்கும் ஓ.பன்னீர்செல்வம் நன்றியினைத் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், திமுக போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

நடைபெற்ற 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளராக என்னைத் தேர்வு செய்து மகத்தான வாய்ப்பு அளித்து, என்னை ஆதரித்து தேர்தல் பரப்புரை ஆற்றிய கழகத் தலைவர், தமிழ்நாடு முதல்-அமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலினுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் நான் வெற்றி பெற உறுதுணையாக இருந்து, தேர்தல் பரப்புரை ஆற்றி, உற்சாகம் ஊட்டிய கழக இளைஞர் அணி செயலாளர், தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும், கழக துணைப் பொதுச்செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவாக்கும், திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கி.வீரமணிக்கும், தேனி வடக்கு மாவட்ட கழக செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்செல்வனுக்கும், களத்தில் அயராது உழைத்த, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், நமது கழக மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்கள், சமூக வலைதளப் போராளிகள், தன்னார்வலர்கள், கழக உடன்பிறப்புகள் மற்றும் எனக்கு வாக்களித்த போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி வாக்காளப் பெருமக்கள் என அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திராவிட மாடல் 2.0 ஆட்சி தொடரும்!

தமிழ்நாடு வெல்லும்!

நாம் வெல்வோம் ஒன்றாக!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.