கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

ஓடும் பஸ்சில் கல்லூரி மாணவிக்கு ஆபாச சைகை.. சிங்கப்பெண் அதிரடிப்படையிடம் சிக்கிய வாலிபர்

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் அந்த வாலிபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

நெல்லை,

நெல்லை டவுன் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் நேற்று முன்தினம் மாலையில் சந்திப்பு பகுதியில் இருந்து டவுன் நோக்கி சென்ற பஸ்சில் பயணம் செய்தார். அதே பஸ்சில் பயணம் செய்த வாலிபர் ஒருவர், அந்த மாணவிக்கு ஆபாசமாக சைகை காட்டியதாக கூறப்படுகிறது.

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி, உடனடியாக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். அதன்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி தலைமையில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் 5 நிமிடங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

ஆபாச சைகை

அவர்கள் பஸ்சை மறித்து நிறுத்தி அதில் ஏறி விசாரணை நடத்தினர். அப்போது, கல்லூரி மாணவிக்கு ஆபாச சைகை காட்டிய வாலிபர் நெல்லை அருகே உள்ள வெள்ளாளன்குளத்தை சேர்ந்த மாரியப்பன் மகன் செல்வ மணிகண்டன் (வயது 24) என்பதும், அவர் சந்திப்பு பகுதியில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.

கைது

உடனே சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் செல்வ மணிகண்டனை பிடித்து நெல்லை சந்திப்பு போலீசில் ஒப்படைத்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து, அவரை அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.