சென்னை,
ஆபாச குறுஞ்செய்தி தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எந்தப் புகாரும் அளிக்கவில்லை என காவல்துறை தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னையை சேர்ந்த அதிமுக வக்கீல் ஆர்.திரிசூலி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டருக்கு தவெக - எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக செய்தி தாள்கள், செய்தி தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளி வந்துள்ளதாக கூறியுள்ளார்.
மேலும், இந்த விவகாரம் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்குமாறு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மாவட்ட கலைக்டர் முறைப்படி புகாரளிக்க வேண்டுமென காத்திருக்காமல் பொது வெளியில் உள்ள தகவல்களை வைத்து விசாரணை நடத்த வேண்டுமெனவும் கூறப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு டிஜிபி மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி.க்கும் உத்தரவிட வேண்டும், டிஜிட்டல் ஆதாரங்களை சேகரித்து பத்திரப்படுத்த உத்தரவிட வேண்டும் என, மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயாணன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, செய்திதாள்களில் வெளிவந்த செய்தியின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு எப்படி உத்தரவிட முடியும்? ஆபாச குறுஞ்செய்தி தொடர்பாக மாவட்ட கலெக்டர் எதுவும் புகார் அளித்துள்ளாரா? ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதற்கான ஆதாரங்கள் உள்ளதா? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
அதற்கு காவல்துறை தரப்பில், இந்த விவகாரம் தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர், தலைமைச் செயலாளர் உள்பட யாரிடமும் புகார் அளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. அப்போது மனுதாரர் தரப்பில், இந்த விவகாரம் குறித்து தேசிய மகளிர் ஆணையம் விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது. ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வை அனைத்து உயரதிகாரிகளும் பாதுகாப்பதாக குற்றம்சாட்டப்பட்டது.
தேசிய மகளிர் ஆணையமே செய்திதாள்களில் வந்த தகவலின் அடிப்படையில்தான் விளக்கம் அளிக்க உத்தரவிட்டிருக்கிறது. இந்த விவகாரம் குறித்து ஆட்சியரிடம் இருந்து எந்த புகாரும் அளிக்காத நிலையில், இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்கப்போவதில்லை என தெரிவித்தார்.
ஒருவேளை குறுஞ்செய்தி அனுப்பியது உண்மையாக இருந்தால், அது துரதிர்ஷ்டவசமானது. இந்த விவகாரம் தொடர்பாக அரசு மற்றும் மாவட்ட கலெக்டரின் கருத்துகளைக் கேட்டு நாளைக்குள் விளக்கம் அளிக்கும்படி அரசுத் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்தார்.