தமிழக செய்திகள்

பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.2.89 கோடி

பழனி முருகன் கோவிலில் நேற்று உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.

பழனி,

அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவில் உலக பிரசித்தி பெற்றதாக விளங்குகிறது. பழனி முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி கேரளம், ஆந்திரா, மராட்டியம் உள்பட வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

அவ்வாறு வரும் பக்தர்கள் கோவிலில் தரிசனம் முடித்த பின்னர் அங்குள்ள உண்டியல்களில் பணம், நகைகள், நவதானியங்களை காணிக்கையாக செலுத்துகின்றனர். இந்த உண்டியல்கள் யாவும் நிரம்பியவுடன், அதிலுள்ள பணம், பொருட்கள் கோவில் நிர்வாகம் சார்பில் எண்ணி அளவிடப்படுகிறது. அதன்படி கடந்த 30-ந்தேதி உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. இந்த நிலையில் நேற்று கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி மீண்டும் நடைபெற்றது.

உண்டியல்களில் இருந்த பணம், தங்கம், வெள்ளி நகைகள் காணிக்கை எண்ணும் பணி நடைபெறும் கார்த்திகை மண்டபத்துக்கு கொண்டு வரப்பட் டது. பின்னர் பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவை தனித்தனியாக பிரிக்கப்பட்டு எண்ணப்பட்டது. அதில் காணிக்கையாக ரூ.2 கோடியே 89 லட்சத்து 45 ஆயிரத்து 711 கிடைத்தது. மேலும் தங்கம் 470 கிராம், வெள்ளி 6 ஆயிரத்து 857 கிராம், வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 739-ம் கிடைத்தன.