தமிழக செய்திகள்

அரசு பள்ளி ஆசிரியரை முட்டிக்கால் போட வைத்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை..!

மாணவரின் தந்தை ராஜசேகர், பள்ளிக்கு வந்து ஆசிரியர் கபில் தேவிடம் தகராறில் ஈடுபட்டார்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம், தேனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வரும் மாணவர் ஒருவர், அதே பள்ளியில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களான நல்லாசிரியர் விருது பெற்ற ராஜா மற்றும் சித்ரா ஆகியோர் குறித்து வகுப்பறை கரும்பலகையில் ஆபாசமாக விமர்சித்து, கேலிச்சித்திரம் வரைந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் கடந்த ஜூலை 30-ஆம் தேதி நடைபெற்றதாக தெரிகிறது.

மாணவரை கண்டித்த ஆசிரியர்

இதையறிந்த வணிகவியல் ஆசிரியர் கபில் தேவ், மாணவரை கண்டித்ததுடன், அவரை முட்டிக்கால் போட வைத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த மாணவரின் தந்தை ராஜசேகர், பள்ளிக்கு வந்து ஆசிரியர் கபில் தேவிடம் தகராறில் ஈடுபட்டார்.

முட்டிக்கால் போட வைத்ததாக புகார்

மாணவரின் தந்தையான ராஜசேகர், ஊராட்சி மன்ற செயலராகவும், அவரது மனைவி பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவராகவும் உள்ளனர். பள்ளிக்கு வந்த ராஜசேகர், ஆசிரியர் கபில் தேவிடம் மிரட்டல் விடுத்து, அவரை முட்டிக்கால் போட வைத்ததாக ஆசிரியர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலெக்டரிடம் ஆசிரியர்கள் மனு

இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி ஆசிரியர்கள், பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஷரண்யா அரியிடம் மனு அளித்துள்ளனர். சம்பவம் குறித்து போலீசார் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணைக்கு பிறகு நடவடிக்கை?

பள்ளியில் மாணவர் ஒழுக்கம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினை, ஆசிரியரை அவரது பெற்றோர் அவமதித்ததாக எழுந்துள்ள புகார் என இரு கோணங்களிலும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் முடிவில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT