சென்னை,
அரசு அதிகாரிகள் தவெக அரசைச் சீர்குலைக்கப் பார்க்கிறார்கள் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
திருச்சி வந்த வைகோ, விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர் பிரச்சனைக்கு திமுகதான் காரணம். எஸ்.ஐ.ஆர் பணி நடைபெற்றபோது திமுக நிர்வாகிகள்தான் உடன் சென்றனர். அதனால்தான், அவர்கள் தொடக்கத்தில் ' எஸ்.ஐ.ஆர்' முறைக்கு எதிராக மௌனம் காத்துவிட்டு, தற்போது நாடு முழுவதும் அதற்கு எதிராகப் போராட்டங்கள் வெடித்ததைத் தொடர்ந்து, திமுகவும் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்து வாக்காளர்கள் நீக்கப்பட்டதற்கு திமுகதான் முழுப் பொறுப்பேற்க வேண்டும்.
திமுக காலத்தில்தான் ரூ.4,000 கோடி செலவு செய்யப்பட்டது. அப்போது கூட்டணி தர்மத்தைப் பாதுகாப்பதற்காக நான் பொதுவெளியில் விமர்சனம் செய்ததில்லை. உள்ளுக்குள் என் எதிர்ப்பைத் தெரிவித்துக்கொண்டுதான் வந்தேன். கூட்டணியில் இருந்துகொண்டு வெளியில் விமர்சனம் செய்வது ஆரோக்கியமான அரசியல் இல்லை. நான் அதைச் செய்ததும் இல்லை.
"தவெக ஆட்சியில் பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை மற்றும் பத்திரப்பதிவுத் துறை உள்ளிட்ட எந்தத் துறையிலும் கமிஷன் கிடையாது; ஊழல் குறைந்துள்ளது. ஊழலை முற்றிலும் ஒழிப்பது என்பது இமயமலையை நகர்த்துவது போன்றது. அதனை இந்த அரசு கொஞ்சம் கொஞ்சமாகச் செய்து வருகிறது. கடந்த ஆட்சிக்காலத்தில் கமிஷன் வாங்கிப் பழகிய அதிகாரிகள், தற்போது தவெக ஆட்சியில் கமிஷன் வாங்க முடியாததால், தவெக அரசைச் சீர்குலைக்கப் பார்க்கிறார்கள்.
எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் இருந்தே கொலை குற்றங்கள் அடுத்தடுத்து வந்த ஒவ்வொரு ஆட்சி காலத்திலும் தொடர்ச்சியாக அதிகரித்து வந்தன. தற்போதும் அப்படித்தான் உள்ளது. முன்பு போல காவல்துறையினர் அதில் உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
தவெக அரசு இந்த குறுகிய காலத்திற்குள் அவர்களால் எது இயலுமோ அதை செய்து வருகிறார்கள். பிழை இருந்தால் அதனையும் திருத்திக் கொண்டு வருகிறார்கள். காலம் செல்ல செல்ல அனுபவம் பெற்று நிர்வாகத்தை இன்னும் சிறப்பாக நடத்துவார்கள் என்று நான் நம்புகிறேன்
இவ்வாறு அவர் கூறினார்.