தமிழக செய்திகள்

தூத்துக்குடியில் கடல்சார் காற்றாலை திட்டம்: ரூ.77 கோடிக்கு டெண்டர் வெளியீடு

இந்தியாவின் முதல் கடல்சார் காற்றாலை முன்மாதிரித் திட்டம் தூத்துக்குடி கடற்கரைப் பகுதியில் திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை,

'நாட்டிலேயே முதன் முறையாக தமிழகத்தின் தென்மாவட்டமான தூத்துக் குடியில் கடல்சார் காற்றாலை திட்டம் தொடங்க ரூ.77 கோடிக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது என்று எரிசக்தி துறை அதிகாரிகள் கூறினர்.

தமிழ்நாடு முன்னணி மாநிலம்

தமிழகம் இந்தியாவின் மிகப்பெரிய காற்றாலை மின்சார உற்பத்தி மையங்களில் ஒன்றாக பல ஆண்டுகளாக திகழ்கிறது. தமிழகத்தின் சம வெளிகள் மற்றும் மலைப்பாதைகள் எங்கும் காற்றாலைகள் பரவியுள்ளன.

அரசாங்கத் தரவுகளின்படி, கடந்த ஜூன் 30-ந்தேதி நிலவரப்படி, நாட்டின் நிறுவப்பட்ட காற்றாலைத் திறன் 57 ஆயிரத்து 443 மெகாவாட்டாக உள்ளது. இதில் 10 ஆயிரத்து 734 மெகாவாட்டிற்கும் அதிகமான திறனுடன், தமிழ்நாடு இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் முன்னணி மாநிலமாக விளங்குகிறது. 'கடல் காற்றாலைத் திட்டங்களில் நிறுவப்பட்ட காற்றாலைகளின் சராசரித் திறன் கடந்த ஆண்டில் 10.3 மெகாவாட்டாக இருந்தது' என்று உலகளாவிய காற்றாலை ஆற்றல் மன்றம் கூறுகிறது.

கடல்சார் காற்றாலை திட்டம்

இப்போது, இத்துறையை ஒரு புதிய தளத்திற்கு அதாவது கடலுக்கு கொண்டு செல்ல தமிழகம் தயாராகி வருகிறது. இந்தியாவின் முதல் கடல்சார் காற்றாலை முன்மாதிரித் திட்டம் தூத்துக்குடி கடற்கரைப் பகுதியில் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, உள்துறைமுகத்தின் தெற்கு அலை தடுப்புச் சுவரிலிருந்து சுமார் 1,650 மீட்டர் தொலைவில் 6.25 மெகாவாட் திறன் கொண்ட ஒரு காற்றாலை நிறுவப்படவுள்ளது.

ரூ.77 கோடி மதிப்பிலான இத்திட்டத்திற்கான ஒப்பந்தப்புள்ளியை 'இந்தியன் போர்ட் ரெயில் ஆண்டு ரோப்வே கார்ப்பரேஷன் லிமிடெட்' (ஐ.பி.ஆர்.சி.எல்.) கோரியுள்ளது. இந்த ஒப்பந்தமானது கடல்சார் காற்றாலையின் வடிவமைப்பு, கொள்முதல், கட்டுமானம், நிறுவுதல், சோதனை மற்றும் செயல்பாட்டிற்குக் கொண்டு வருதல் ஆகியவற்றை உள்ளடக்கியது. அத்துடன் 2 ஆண்டுகளுக்கான இயக்கம் மற்றும் பராமரிப்புப் பணிகளையும் இது உள்ளடக்கியுள்ளது.

உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் மாநில மின்சார தொகுப்பிற்கு அனுப்பப்படும். இது இந்தியாவின் கடற்கரையோரம் எதிர்காலத்தில் அமையவிருக்கும் பெரிய அளவிலான கடல் காற்றாலைத் திட்டங்களுக்கு ஒரு அடித்தளத்தை வழங்கும் என்றும் அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

தூத்துக்குடி ஏன் தேர்வு?

தூத்துக்குடியில் சாதகமான கடல் காற்றாலைச் சூழல்களையும், நன்கு நிறுவப்பட்ட துறைமுகச் சூழலமைப்பு மற்றும் கடல்சார் தளவாட உள்கட்டமைப்பையும் ஒருங்கே கொண்டுள்ளது. இது, இந்தத் திட்டத்தில் காற்றாலையை மட்டுமல்லாமல், கடலில் எந்திரங்களை நிறுவி இயக்குவதற்குத் தேவையான பரந்த சூழலமைப்பையும் சோதித்துப் பார்க்க வாய்ப்பளிக்கிறது.

ஜெர்மனியின் வடக்குக் கடல் பகுதியில் 'ஆல்பா வென்டஸ்' என்ற முதல் கடல்சார் காற்றாலைப் பண்ணை வெற்றிகரமாக மின்சார உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது என்று எரிசக்தி துறை அதிகாரிகள் கூறினர்.

SCROLL FOR NEXT