திருச்சி,
திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காவிரி பழைய பாலத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் நேற்று முதல் தற்காலிகமாக அந்த பாலம் மூடப்பட்டது.
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சஞ்சீவிநகர்- திருவானைக்காவல் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே 1963-ம் ஆண்டு கட்டப்பட்ட பழைய பாலம் உள்ளது. இந்த பாலத்தில் 14 தாங்கு தூண்கள் உள்ளன. இந்த தாங்கு தூண்களுக்கும், பாலத்தின் சிலாப்களுக்கும் இடையே 120 பேரிங்குகள் உள்ளன. பாலத்தின் மீதுள்ள சாலையில் 16 இணைப்பு பகுதிகளிலும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதில், பழைய காவிரி பாலத்தில் 2010-ம் ஆண்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 16 ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது இப்பாலத்தில் மீண்டும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது.
பழைய பாலத்தில் உள்ள 14 தாங்கு தூண்களுக்கும், பாலத்தின் சிலாப்களுக்கும் இடையே உள்ள 120 பேரிங் குகள் மாற்றப்பட உள்ளன. இப்பணிகளை 3 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக இந்த பாலம் நேற்று இரவு முதல் தற்காலிகமாக மூடப்பட்டது.
இந்த பணிகள் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, திருச்சியில் இருந்து சென்னை வழித்தடத்தில் செல்லும் வாகனங்கள் சஞ்சீவி நகரில் இருந்து புதிய காவிரிப்பாலம், கொண்டையம்பேட்டை வழியாகவும், சென்னையில் இருந்து திருச்சி நோக்கி வரும் வாகனங்கள் சர்க்கார்பாளையம் அணுகு சாலை, கொண்டையம்பேட்டை, புதிய காவிரி பாலம், சஞ்சீவிநகர் வழியாகவும் செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதற்காக புதிய பாலத்தில் சாலையின் நடுவே தடுப்புகள் வைக்கப்பட்டு வாகனங்கள் பிரிந்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் பழைய காவிரி பாலத்தை மூடியதால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஏற்கனவே மாநகரில் 3 பாலங்கள் பராமரிப்பு பணி என்ற பெயரில் மூடப்பட்டு பணிகள் மந்த கதியில் நடந்து வரும் நிலையில், முக்கிய தேசிய நெடுஞ்சாலையில் காவிரி பாலத்தை மூடியது பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.