தமிழக செய்திகள்

மதுரையில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் ஒலிம்பிக் அகாடமி: உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்

மதுரை மாவட்ட விளையாட்டு வளாகத்தில் கட்டப்பட்டுள்ள ஒலிம்பிக் அகாடமியை தமிழக துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டு, விளையாட்டு வீரர்களுடன் கலந்துரையாடினார்.

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவாக்கி வருகின்றார். விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு அளித்து பல்வேறு அரசுத்துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணி நியமனம் செய்து வருகின்றார். தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை (Elite) வழங்கும் திட்டத்தின்கீழ் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கத் தொகை 25 லட்சம் ரூபாயை 30 லட்சம் ரூபாயாக உயர்த்தியதோடு இந்த திட்டத்தில் பயன் பெறும் பயனாளிகளின் எண்ணிக்கையை முதல்-அமைச்சர் அவர்கள் 12 லிருந்து 50ஆக உயர்த்தியுள்ளார்.

மேலும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் பெறுவதற்கான ஊக்குவிப்பு (MIMS) வழங்கும் திட்டத்தின் கீழ் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்பட்டு வந்து நிதியுதவியை 10 லட்சம் ரூபாயிலிருந்து இருந்து 12 லட்சம் ரூபாயாக உயர்த்தியதோடு, பயன்பெறும் விளையாட்டு வீரர்களின் எண்ணிக்கையை 125ஆக உயர்த்தியுள்ளார். அதேபோல் சாம்பியன் டெவலப்மெண்ட் திட்டத்தின் (CDS) கீழ் பயன்பெறும் வயதிற்குட்பட்டோர் பிரிவு விளையாட்டு வீரர்களின் எண்ணிக்கையை 100 லிருந்து 200ஆக உயர்த்தியுள்ளார்.

தமிழ்நாடு முதல்-அமைச்சர் விளையாட்டு வீரர்கள் சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்ளவும், வெளிநாடுகளுக்கு சென்று பயிற்சி பெறவும், அதிநவீன உயர்தர விளையாட்டு உபகரணங்களை வாங்கவும், தமிழ்நாடு சாம்பியன் அறக்கட்டளையை உருவாக்கி நிதியுதவி அளித்து வருகின்றார். மேலும், சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகையை வழங்கி வருகின்றார்.

மேலும் தமிழ்நாட்டின் விளையாட்டு வீரர்கள் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க பயிற்சி பெறும் வகையில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட விளையாட்டு வளாகங்களிலும் சர்வதேச தரத்திலான உடற்பயிற்சி கூடங்கள், உள்ளரங்க மைதானங்கள், பார்வையாளர் கூடங்கள், அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் முதல்-அமைச்சர், சிறு விளையாட்டு அரங்கம், உள்ளரங்க வாலிபால், கூடைப்பந்து, மைதானங்கள், கபடி குத்துச்சண்டை மைதானங்கள், சர்வதேச தரத்திலான நீச்சல் குளங்கள், ஹாக்கி மைதானங்கள் என நவீன விளையாட்டு கட்டமைப்புகளை உருவாக்கி வருகின்றார். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனியாக விளையாட்டு மைதானங்களை நிறுவி வருகின்றார். இதன் காரணமாக கடந்த 5 ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் சர்வதேச போட்டிகளில் பதக்கங்கள் வென்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரை மாவட்டத்தில் உயர்திறன் வாய்ந்த விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் பதக்க மேடையை அடைவதற்கு தேவையான அனைத்து வசதிகளும் கொண்ட ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும் என அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, ரூ.6 கோடி மதிப்பீட்டில் மதுரை மாவட்ட விளையாட்டு வளாகத்தில் கபடி மற்றும் டேபிள் டென்னிஸ் விளையாட்டினை ஊக்குவிக்கும் வகையில் தரை தளத்தில் ஒரு கபடி ஆடுகளம், முதல் தளத்தில் 6 எண்ணிக்கை கொண்ட டேபிள் டென்னிஸ் ஆடுகளம் கொண்ட 250 இருக்கைகளுடன் கூடிய உள்விளையாட்டரங்கம் மற்றும் ஆண், பெண் உடைமாற்றும் அறைகள் கொண்ட வசதியுடன் ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒலிம்பிக் அகாடமியில் நவீன வசதிகளுடன் கொண்ட புதிய உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது உள்ள திறந்தவெளி கூடைப்பந்து ஆடுகளம் செயற்கை தரையமைப்பு ஆடுகளமாகவும், தற்போது உள்ள மூன்று திறந்தவெளி டென்னிஸ் ஆடுகளங்கள் செயற்கை தரையமைப்பு கூடிய புதிய டென்னிஸ் ஆடுகளங்களாகவும் மாற்றியமைக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று மதுரை மாவட்ட விளையாட்டு வளாகத்தில் மொத்தம் ரூ.6 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கபடி ஆடுகளம், 6 எண்ணிக்கை கொண்ட டேபிள் டென்னிஸ் ஆடுகளங்கள் கொண்ட மதுரை ஒலிம்பிக் அகாடமி, செயற்கை தரையமைப்பு கொண்டதாக மேம்படுத்தப்பட்ட 3 டென்னிஸ் மைதானங்கள், 2 கூடைப்பந்து மைதானங்களை திறந்து வைத்து பார்வையிட்டு, விளையாட்டு வீரர்களுடன் கலந்துரையாடினார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.தளபதி, ஆ.வெங்கடேசன், மு.பூமிநாதன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை முதன்மைச் செயலாளர் சத்யபிரத சாகு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி, மாவட்ட கலெக்டர் கே.ஜே.பிரவீன்குமார், மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன் உள்பட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.