சென்னை,
அரசுத்துறைகள், பொதுத்துறை நிறுவனங்களுக்கு மனிதவளத்தை வெளிமுகமை மூலம் வழங்குவதற்கு ஓ.எம்.சி.எல். நிறுவனத்தை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு ஆகும் சம்பளச்செலவு, படிகள் உள்ளிட்ட சலுகைகள், ஓய்வூதியங்கள் என கொடுக்கப்படும் ஊதியத்தை, பெரும் சுமையாக ஆட்சியாளர்கள் கருதத் தொடங்கினர்.
அதன்படி, சில பணிகளுக்கு மட்டும் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை அரசு தேர்வு செய்ய தொடங்கியது. கீழ்நிலைப் பணிகளில் முதலில் இதை அரசு நடைமுறைப்படுத்தியது. பின்னர் படிப்படியாக திறன் பணிகளுக்கும் ஒப்பந்தப் பணியாளர்களை அரசு நியமிக்கத் தொடங்கியது. இதற்கு சில ஒப்பந்ததாரர் நிறுவனங்களையும் அரசுத் துறைகள் தேர்வு செய்து வைத்திருந்தன. தேர்தல் கமிஷனும் கணினி இயக்கம் உள்ளிட்ட சில பணிகளுக்கு தொடர்ந்து ஒப்பந்த பணியாளர்களையே பயன்படுத்தி வருகிறது.
இந்தநிலையில் புதிய உத்தரவு மூலம் மற்றொரு மாற்றத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எம்.ஏ.சித்திக்கின் உத்தரவு வருமாறு:-
தமிழ்நாடு ஒப்பந்தப்புள்ளிகளில் வெளிப்படைத்தன்மைச் சட்டத்தின் அடிப்படையில் அறிவிப்பாணை வெளியிடப்படுகிறது. அதன்படி, அரசுத் துறைகள், மாநில பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அதுபோன்ற அமைப்புகளுக்கு மனித வளத்தை வெளிமுகமை மூலம் வழங்குவதற்கான, ஒரு முகமையாக சென்னையில் உள்ள அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தை (ஓ.எம்.சி.எல்.) தமிழ்நாடு கவர்னர் நியமிக்கிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசு அதிகாரிகளிடம் விசாரித்தபோது அவர்கள் கூறியதாவது:- அரசுக்குப் பணியாளர்கள் தேவையென்றால், அதற்காகத் தேர்வு நடத்தி ஆட்களை தேர்ந்தெடுப்பதில் மாற்றங்கள் இருக்காது. ஆனால் சில திறனற்ற அல்லது திறன் பணிகளுக்கு ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆட்கள் தேவைப்பட்டால், ஒவ்வொரு அரசுத் துறைகளும், பொதுத்துறை நிறுவனங்களும், அரசு கழகங்களும், தனியார் ஒப்பந்த நிறுவனங்களை அணுகத் தேவையில்லை. அவர்கள் ஓ.எம்.சி.எல். நிறுவனத்தை அணுகினால் போதும். அப்படிப்பட்ட ஒப்பந்தப் பணியாளர்கள் தேவைப்படும் நிலையில், அதற்கான ஒப்பந்த அடிப்படையிலான மனிதவளத்தை ஓ.எம்.சி.எல். நிறுவனம் தேர்வு செய்து அளிக்கும்.
இவ்வாறு அவர்கள் விளக்கம் தெரிவித்தனர்.