பெரம்பலூரில் இருந்து மும்பை நோக்கி ஒரு கண்டெய்னர் லாரி புறப்பட்டு வந்து கொண்டு இருந்தது. இந்த லாரி சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்த காந்திபுரம் பகுதியில் நள்ளிரவில் வந்து கொண்டு இருந்தது. அப்போது திடீரென கண்டெய்னர் லாரி பழுதாகியுள்ளது. இதையடுத்து கண்டெய்னர் லாரி டிரைவர் லாரியை சரிசெய்ய சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கண்டெய்னர் லாரியை ஓட்டி சென்றார்.
அப்போது கரூரில் இருந்து சென்னை நோக்கி ஒரு ஆம்னி பஸ் சென்று கொண்டு இருந்தது. பஸ்சில் 36 பயணிகள் இருந்தனர். அப்போது ஆம்னி பஸ் எதிர்பாராதவிதமாக கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்தானது. இந்த விபத்தில் ஆம்னி பஸ்சில் பயணம் செய்த 15-க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்தனர். இரவு நேரம் என்பதால் அனைவரும் அயர்ந்து தூங்கி கொண்டு இருந்தனர். அந்த நேரத்தில் இந்த விபத்து நடந்ததால் பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் அலறி சத்தம் போட்டனர்.
இந்த விபத்து பற்றி தெரியவந்ததும் ஆத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் விபத்தில் காயம் அடைந்த ஆம்னி பஸ் பயணிகள் 15-க்கும் மேற்பட்டோரை மீட்டு சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கண்டெய்னர் லாரியில் வந்த அரியானாவை சேர்ந்த 3 பேரும் காயம் அடைந்தனர். அவர்களையும் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து 4 பெண்கள் உள்பட 6 பேர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து ஆத்தூர் ஊரக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.