சென்னை,
விமான எரிபொருளுக்கு வழங்கப்பட்டுள்ள வரிச்சலுகையை போன்று, பேருந்துகளுக்கான டீசல் மீதான மத்திய, மாநில அரசுகளின் வரிகளையும் குறைக்க வேண்டும் என்று அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
விமான எரிபொருளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள வரிச் சலுகையைப் போன்று, பொதுப் பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் பேருந்துகளுக்குப் பயன்படுத்தப்படும் டீசல் மீதான வரிகளையும் மத்திய, மாநில அரசுகள் குறைக்க வேண்டும் .
பொதுமக்களின் அன்றாடப் பயணத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் பேருந்துகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. டீசல், பராமரிப்பு, உதிரிப்பாகங்கள், காப்பீடு, சுங்கக் கட்டணம் மற்றும் பணியாளர் ஊதியம் உள்ளிட்ட செலவுகள் அதிகரித்துள்ளதால், தனியார் பேருந்துத்துறை கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது.
ஒரு லிட்டர் டீசலுக்கு மத்திய அடிப்படை கலால் வரி ரூ.1.80, வேளாண் உள்கட்டமைப்பு மேம்பாட்டு மேல்வரி ரூ.4.00, சாலை மற்றும் உள்கட்டமைப்பு மேல்வரி ரூ.2.00 என மொத்தம்ரூ.7.80 மத்திய வரியாக விதிக்கப்படுகிறது. இதனுடன், தமிழக அரசின் 11 சதவீதம் மதிப்புக்கூட்டு வரியும், லிட்டருக்கு ரூ.9.62 நிலையான வரித்தொகையும் விதிக்கப்படுகின்றன.
விமான போக்குவரத்தை ஊக்குவிக்கவும், விமான நிறுவனங்களின் இயக்கச் செலவைக் குறைக்கவும், விமான எரிபொருள் மீதான வரிக் குறைப்பை அறிவித்துள்ள தமிழக அரசின் நடவடிக்கையை வரவேற்கிறோம். அதே அணுகுமுறையில், பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தும் பேருந்துகளுக்கான டீசல் வரியையும் குறைக்க வேண்டும்.
தமிழக அரசின் மகளிருக்கான இலவச பேருந்து பயணத் திட்டம், பெண்களின் பயணச் செலவைக் குறைக்கும் நலத்திட்டமாகும். அதேவேளையில், இத்திட்டத்தால் தனியார் பேருந்துகளின் பயணிகள் எண்ணிக்கையும் வருவாயும் குறைந்துள்ளது. இந்தப் பாதிப்பையும் அரசு ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
எனவே, மத்திய, மாநில அரசுகளிடம் பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்கிறோம்:
1. பேருந்துகளுக்குப் பயன்படுத்தப்படும் டீசல் மீதான மத்திய கலால் வரி மற்றும் மேல்வரிகளைக் குறைக்க வேண்டும்.
2. தமிழக அரசு விதிக்கும் 11 சதவீதம் மதிப்புக்கூட்டு வரி மற்றும் லிட்டருக்கு ரூ.9.62 நிலையான வரித் தொகையைக் குறைக்க வேண்டும்.
3. பேருந்துகளுக்கு, வாகனப் பதிவு விவரங்கள் மற்றும் சரிபார்க்கப்பட்ட டீசல் கொள்முதல் அடிப்படையில் சிறப்பு வரிச் சலுகை, மானியம் அல்லது செலுத்திய வரியைத் திருப்பி வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும்.
4. மகளிருக்கான இலவச பேருந்து பயணத் திட்டத்தால் தனியார் பேருந்துச் சேவைகளின் வருவாயில் ஏற்பட்டுள்ள தாக்கத்தை ஆய்வு செய்து, உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
5. பொதுப் பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் பேருந்துகளுக்கான எரிபொருள் வரிச் சலுகைகள் தொடர்பாக கொள்கையை உருவாக்க வேண்டும்.
பேருந்துகளுக்கான டீசல் வரி குறைப்பு, இயக்கச் செலவைக் குறைத்து, பயணக் கட்டண உயர்வுக்கான அழுத்தத்தைத் தணிப்பதுடன், பொதுமக்களுக்கு நியாயமான கட்டணத்தில் தொடர்ந்து சேவை வழங்கவும் உதவும்.
பயணிகள் நலன், பேருந்துச் சேவைகளின் தொடர்ச்சி மற்றும் இத்துறையைச் சார்ந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, மத்திய, மாநில அரசுகள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.