சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் தனியார் ஆம்னி பஸ்கள் அனைத்தும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்தே இயக்கப்பட வேண்டும் என்ற மாநில போக்குவரத்து ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்யக் கோரி ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் மற்றும் தனியார் பேருந்து நிறுவனங்கள் தாக்கல் செய்த வழக்கில் சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ஆம்னி பஸ்களும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்தே இயக்கப்பட வேண்டும் என்றும், சென்னை நகருக்குள் நுழையக்கூடாது என்றும் மாநில போக்குவரத்து துறை கடந்த 2024 ஜனவரி 22-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட் , இடைக்கால உத்தரவாக போரூர் மற்றும் சூரப்பட்டு பகுதிகளில் பயணிகளை ஏற்றவும் இறக்கவும் னுமதி வழங்கியதுடன், தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்குள் சென்று பயணிகளை ஏற்றி இறக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், வழக்கின் இறுதி விசாரணையை நடத்திய நீதிபதி வி. லட்சுமி நாராயணன், தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகளின்படி பேருந்து முனையம் அமைப்பதற்கான ஒப்புதலை மாநில போக்குவரத்து ஆணையத்திடம் கோரி சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (CMDA) விண்ணப்பிக்க முடியாது என்றும், அதற்கான விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பான காட்டாங்குளத்தூர் பஞ்சாயத்து யூனியன் தாக்கல் செய்யலாம் என்றும் தெரிவித்தார்.
மேலும், குறிப்பிட்ட வழித்தடத்தில் பேருந்துகளை இயக்குவதற்கான உரிமம் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள நிலையில், அவற்றின் இயக்கத்தை கட்டுப்படுத்த முடியாது எனக் கூறிய நீதிபதி, தனியார் ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்திலிருந்தே இயக்கப்பட வேண்டும் என்ற மாநில போக்குவரத்து ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். அதேநேரத்தில், கடந்த ஜனவரி மாதம் போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட முடிவுகளின்படி, போரூர் சுங்கச்சாவடி, சூரப்பட்டு ஆகிய இடங்களுடன் மாதவரம் ரவுண்டானா அருகிலுள்ள பகுதியையும் பயணிகளை ஏற்ற, இறக்க பயன்படுத்த வேண்டும் என்ற முடிவை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்றும் நீதிபதி வலியுறுத்தியுள்ளார்.