சென்னை,
ஆம்னி பேருந்துகளுக்கு கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச்செயலாளர் மு. வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-.
தமிழ்நாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் 6000-க்கும் அதிகமான ஆம்னி பேருந்துகளை இயக்கி வருகின்றன. இந்த நிறுவனங்கள் பண்டிகை காலங்களில், குறிப்பாக தீபாவளி, பொங்கல், புதுவருடப் பிறப்பு போன்ற காலங்களில் வழக்கமாக வசூலிக்கப்படும் கட்டணங்களை விட எட்டு அல்ல ஒன்பது மடங்கு கட்டணங்களை உயர்த்தி வசூலித்து வருகின்றன. இதனால், சென்னை பெரு மாநகர் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் இருந்தும், திருச்சி, திருப்பூர், கோவை, ஈரோடு, ஓசூர், வேலூர் போன்ற தொழில் நகரங்களிலும் தொழிலாளர்கள், பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர் சென்று திரும்ப படும்பாடு படுதுயரமாகும்.
ஒவ்வொரு முறையும் புகார் கூறுவதும், அரசுத் தரப்பில் மிரட்டல், எச்சரிக்கை அறிக்கைகளை வெளியிடுவதும் பொதுமக்களின் துயரங்களுக்கு தீர்வாக அமைவதில்லை என்பதே அனுபவமாகும். வரும் 8-ம் தேதி தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் திரும்ப பயணச் சீட்டு கிடைக்காத ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பரிதவித்து நிற்கின்றன என்பதை தமிழ்நாடு அரசின் கவனத்துக்கு தெரிவித்து, தமிழ்நாடு அரசு போதுமான சிறப்பு பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுப்பதுடன் தனியார் ஆம்னி பேருந்துகளுக்கு நியாயக்கட்டணம் நிர்ணயித்து அறிவிக்க வேண்டும். இதில், அத்துமீறல் நடந்தால் அதன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெரும்பாலான பேருந்துகள் மாலை, இரவு என தொழில் நகரங்களில் இருந்து புறப்படுவது போல், அதிகாலை முதல் மதியம் வரையிலும் கூடுதலான பேருந்துகள் புறப்படுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.