சென்னை,
தமிழகத்தில் நடந்து முடிந்த 2026 சட்டமன்ற தேர்தலில் தவெக வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருக்கிறது. முதல்-அமைச்சர் விஜய் தமிழ்நாட்டின் 14 வது முதல்-அமைச்சராக பொறுப்பேற்று இருக்கிறார்.
அவர் முதல்-அமைச்சராக பொறுப்பேற்றதிலிருந்து வழிபாட்டுத்தலங்கள் பள்ளிகளுக்கு அருகில் உள்ள மதுக்கடைகளை மூடுதல், கிட்னி விவகாரம் குறித்த தீவிர விசாரணை, போதை தடுப்பு அலகுகளை உருவாக்குதல் உள்ளிட்ட பல மக்கள் நலத்திட்டங்களை மேற்கொண்டு வருகிறார் இது மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது.
இந்தநிலையில், நடிகர் ஸ்ரீநாத் விஜய்யின் நீண்டகால நண்பர். விஜய்யின் மிக மிக நெருங்கிய நண்பரான இவர் அவரின் ஆரம்பகால திரையுலகம் முதலே நண்பராக இருந்து வருகிறார். விஜய் கட்சி தொடங்கியது முதலே அவருக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த ஸ்ரீநாத் தன்னையும் தவெக-வில் இணைத்துக் கொண்டு செயல்பட்டார்.
அவருக்கு தூத்துக்குடியில் போட்டியிட விஜய் வாய்ப்பு வழங்கினார். அந்த வாய்ப்பை பயன்படுத்தி தீவிர பரப்புரையில் ஈடுபட்ட ஸ்ரீநாத் முன்னாள் அமைச்சரான கீதா ஜீவனை வீழ்த்தி வெற்றி பெற்றார். தமிழக வெற்றிக் கழகத்தின் வரலாற்றில் அவர்களின் முதல் சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீநாத்தே ஆவார்.
52 வயதான ஸ்ரீநாத் சென்னையில் பிறந்தவர். இவர் 1973ம் ஆண்டு ஜுலை 18ம் தேதி பிறந்துள்ளார். விஜய்யின் கல்லூரி கால நண்பரான இவர் நாளைய தீர்ப்பு படத்திலே அவருக்கு நண்பராக நடித்து விஜய்யுடன் இணைந்து அவரும் திரையுலகில் அறிமுகமானார். பின்னர், மாண்புமிகு மாணவன் படத்திலும் விஜய்யுடன் இணைந்து நடித்தார்.
பின்னர், 12 பி படத்தில் நடித்ததுடன் உதவி இயக்குனராகவும் பணியாற்றினார். ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே, காதல் வைரஸ், அலை, உள்ளம் கேட்குமே, வட்டாரம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். உள்ளம் கேட்குமே, உன்னாலே உன்னாலே, சந்தோஷ் சுப்ரமணியம், தாம் தூம் ஆகிய படங்கள் மூலம் இவர் மிகவும் பிரபலம் ஆனார். குட்டி, உத்தமபுத்திரன், ரெளத்திரம், மனம் கொத்தி பறவை ஆகிய படங்களிலும் இவரது நகைச்சுவை பிரபலம். விஜய்யுடன் இவர் வேட்டைக்காரன், மாஸ்டர் படத்தில் இணைந்து நடித்தார். ஜனநாயகன் படத்திலும் இவர் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.
நடிகராக மட்டுமின்றி இயக்குனராக முத்திரை, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், லெக் பீஸ் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான காதலிக்க நேரமில்லை சீரியலிலும் நடித்துள்ளார்.
நடிகராகவும், விஜய்யின் நண்பராகவும் அறியப்பட்ட ஸ்ரீநாத் தவெக அலையால் தூத்துக்குடியில் வெற்றி பெற்றார்.
இந்தநிலையில், தமிழக அமைச்சரவையில் புதிதாக 23 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கவர்னர் அர்லேகர் இன்று பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இருவர் அமைச்சர்களாக பதவியேற்றனர். முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் பட்டியலினத்தை சேர்ந்த 7 பேர் பதவியேற்றுள்ளனர்.
இந்த நிலையில், புதிதாக பதவி ஏற்றுள்ள அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்து கவர்னர் அர்லேகர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளார். விஜயின் நண்பரும் தூத்துக்குடி எம்.எல்.ஏ.வுமான ஸ்ரீநாத்திற்கு தமிழக அமைச்சரவையில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
எனது தலைவர்களுக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். நாங்கள் அனைத்துத் தடைகளையும் உடைப்போம். நமது மக்கள் சந்தித்து வரும் அனைத்துப் பிரச்சினைகளையும் நான் சரிசெய்து, அவர்கள் அமைதியான சமூக வாழ்க்கையை வாழ்வதை உறுதி செய்வேன். மீனவர்கள் பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் இருப்பதையும், மற்றவர்களுக்கு எந்த இடையூறும் இன்றி அவர்கள் தங்கள் வேலையைச் செய்வதையும் நாங்கள் உறுதி செய்வோம்.
முதல் நாளிலிருந்தே, எனது தலைவரிடமிருந்து ஒரு நண்பராக நான் நிறைய கற்று வருகிறேன்.
அவரோடு கல்லூரியில் பயணித்தேன், சினிமாத் துறையில் பயணித்தேன்.இப்பொழுது அரசியலில் பயணிக்கிறேன். இப்போது ஒரு அரசியல்வாதியாக அவரிடமிருந்து நான் தினமும் நிறைய கற்றுக்கொள்கிறேன். அவர் எப்போதும் ஒரு சிறந்த தலைவராக இருப்பார். அவருடைய ஒழுக்கம், நேரந்தவறாமை, நேர்மை மற்றும் கருணை ஆகியவற்றை நான் எப்போதும் பின்பற்றுவேன். கடைசிவரை அவருடன் இருப்பேன் என்றார்.