தமிழக செய்திகள்

மகாளய அமாவாசையையொட்டி தாமிரபரணி ஆற்றங்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்!

முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் அடுத்தடுத்த தலைமுறையினருக்கும் நன்மைகள் கிடைக்கும்.

திருநெல்வேலி:

புரட்டாசி மாத மகாளய அமாவாசையையொட்டி, திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் ஆயிரக்கணக்கானோர் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து இன்று (சனிக்கிழமை) வழிபட்டனர்.

மகாளய அமாவாசை வழிபாடு

ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசை தினங்களில் பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கம். குறிப்பாக, தை மற்றும் ஆடி மாத அமாவாசை தினங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால், ஆண்டு முழுவதும் அவர்களை வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

அதேபோல், புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டால், தங்களது வம்சத்தினருக்கும், அடுத்தடுத்த தலைமுறையினருக்கும் நன்மைகள் கிடைக்கும் என்பது இந்து சமய மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

தாமிரபரணியில் குவிந்த மக்கள்

இதையொட்டி, மகாளய அமாவாசையான இன்று அதிகாலை முதலே திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் பொதுமக்கள் திரண்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

குறிப்பாக, வற்றாத ஜீவநதியான தாமிரபரணி ஆற்றங்கரையில் ஏராளமானோர் குவிந்தனர். குறுக்குத்துறை முருகன் கோவில் அருகே ஆயிரக்கணக்கானோர் திரண்டு, ஆற்றில் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர்.

இதேபோல், வண்ணாரப்பேட்டை பேராச்சியம்மன் கோவில் படித்துறை உள்ளிட்ட பகுதிகளிலும் ஏராளமானோர் புனித நீராடி முன்னோர்களை வழிபட்டனர்.

SCROLL FOR NEXT