சென்னை,
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் நினைவு நாளையொட்டி, அவரது வீரத்தையும் தியாகத்தையும் தேசப்பற்றையும் போற்றி வணங்குவதாக முன்னாள் மத்திய இணை மந்திரி எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து எல். முருகன் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளதாவது:-
இந்திய விடுதலைப் போராட்டக் காலத்தில், ஆங்கிலேயர்களின் அடக்குமுறைக்கு எதிராகத் தனது வீரத்தாலும், விவேகத்தாலும், பொருளாதாரப் போராட்டத்தாலும் எதிர்த்து நின்றவர் “கப்பலோட்டிய தமிழன்” வ.உ. சிதம்பரம் பிள்ளை. ஆங்கிலேயர்களின் கடல் வணிக ஏகபோகத்திற்கு சவால் விடுத்து, உள்நாட்டு வணிகத்தையும் சுதேசி சிந்தனையையும் வலுப்படுத்தும் நோக்கில் சுதேசி கப்பல் நிறுவனத்தைத் தொடங்கிய அவரது துணிச்சலும் தொலைநோக்குப் பார்வையும் இந்தியத் தொழில்முனைவோர் வரலாற்றில் என்றும் அழியாத சாதனையாகத் திகழ்கிறது.
அவரது விடுதலை வேட்கையைக் கண்டு அஞ்சிய ஆங்கிலேய அரசு, அவருக்குக் கடுமையான தண்டனைகளை வழங்கியது. செக்கிழுத்த செம்மல் என்ற வரலாற்றுப் பெருமையைப் பெற்ற அவர், சொல்லொணாத் துயரங்களையும் கொடுமைகளையும் எதிர்கொண்டபோதும் தனது கொள்கையிலிருந்தும் தேசப்பற்றிலிருந்தும் ஒருபோதும் பின்வாங்கவில்லை.
தமிழர்களின் வீரத்திற்கும், தியாகத்திற்கும், சுயமரியாதைக்கும் அடையாளமாகத் திகழும் அவரது வாழ்க்கை, இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழகத்தின் மகத்தான பங்களிப்பைத் தலைமுறைகள் கடந்து பறைசாற்றிக் கொண்டே இருக்கும். தாய்நாட்டின் விடுதலைக்காகத் தன்னையே அர்ப்பணித்த தியாகச் செம்மல் வ.உ. சிதம்பரம் பிள்ளையின் நினைவு நாளில், அவரது தியாகத்தையும் தேசப்பற்றையும் போற்றி வணங்குகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.