கேரள மாநிலத்தில் பிரசித்திபெற்ற ஓணம் பண்டிகை வருகிற 26-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. தொடர்ந்து 10 நாட்கள் இந்த விழா கொண்டாடப்படும். தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை ஜாதி மதங்கள் கடந்து, அனைத்து தமிழர்களும் ஒட்டுமொத்தமாக கொண்டாடப்படுவது போல் கேரள மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக கொண்டாடப்படும் பண்டிகையாக ஓணம் பண்டிகை திகழ்கிறது. கேரள மாநிலத்தவர் அனைவரும் தங்கள் சொந்த ஊர்களில், குடும்பத்தினர், உற்றார் உறவினர்களுடன் கூடி மகிழ்ந்து ஓணம்பண்டிகை கொண்டாடுவது வழக்கம். இதற்காக வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் கேரள மாநிலத்தவர்கள், சொந்த ஊர்களுக்கு, ஓணம் பண்டிகை கொண்டாட்டங்களுக்கு, சில தினங்களுக்கு முன்னதாகவே சென்று விடுவது வழக்கம்.அதன்படி ஓணம் பண்டிகையை கொண்டாடுவதற்கு சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள கேரள மாநிலத்தவர்கள், சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்ல தொடங்கியுள்ளனர். இதற்காக சிறப்பு ரெயில்கள், பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதைப்போல் ரெயில், பஸ்களில் செல்லும்போது, பல மணி நேரம் பயண நேரம் ஆகும் என்பதால் பலர் விமானங்களில், கேரள மாநிலம் செல்கின்றனர்.
சனி, ஞாயிறு விடுமுறை நாட்களோடு சேர்த்து ஓணம் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவதற்கு இன்று சென்னை விமான நிலையத்தில் இருந்து கொச்சி, திருவனந்தபுரம், கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய இடங்களுக்கு விமான பயணங்களை மேற்கொண்டுள்ளனர்.கேரள மாநிலத்தவர் ஒட்டுமொத்தமாக விமானங்களில் சொந்த ஊர் திரும்புவதால், சென்னையில் இருந்து கொச்சி, திருவனந்தபுரம், கோழிக்கோடு, கண்ணூர் செல்லும் விமானங்களில், பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.இதனால் வழக்கம் போல் சென்னை விமான நிலையத்தில், பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் வழித்தடங்களில் விமான கட்டணங்கள் பல மடங்கு அதிகரித்துள்ளன. குறிப்பாக சென்னையில் இருந்து கொச்சிக்கு வழக்கமான கட்டணம் ரூ.5,336 ஆகும். ஆனால் இன்று கட்டணம் ரூ.14,843 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் சென்னையில் இருந்து திருவனந்தபுரத்துக்கு வழக்கமான கட்டணம் ரூ.5,853. ஆனால் இன்று கட்டணம் ரூ.14,700 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் இருந்து கோழிக்கோடுக்கு வழக்கமான கட்டணம் ரூ.6,158. இன்று கட்டணம் ரூ.17,678. சென்னை-கண்ணூர் வழக்கமான கட்டணம் ரூ.5,655. இன்று கட்டணம் ரூ.12,270. கொச்சி வழியாக செல்வதற்கு கட்டணம் ரூ.21,694.இவ்வாறு பல மடங்கு விமான டிக்கெட் கட்டணங்கள் அதிகரித்து உள்ளதால், பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆனாலும் கேரள பயணிகள், உற்சாகத்துடன் தங்கள் பயணத்தை மேற்கொண்டு உள்ளனர். அதோடு இதுபோன்ற பண்டிகை காலங்களில், கேரள மாநிலத்திற்கு கூடுதல் விமானங்களை, சென்னையில் இருந்து இயக்க வேண்டும் என்ற கோரிக்கையும் விடுக்கின்றனர்.