தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியில் அரசு பெண் மருத்துவரிடம், திருமணம் செய்து கொள்ளுமாறு தொடர்ந்து தொந்தரவு அளித்த ஒருவரை கைது செய்ததோடு, இதற்கு உடந்தையாக இருந்த 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி கணபதிநகரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் சாத்தான்குளம் அருகே உள்ள சாலைப்புதூர் அரசு கால்நடை மருந்தகத்தில் கால்நடை உதவி மருத்துவராக பணியாற்றி வருகிறார். இந்த மருந்தகத்திற்கு மீரான்குளத்தைச் சேர்ந்த பால்ராஜ் மகன் ஜான்சன் என்பவர் தனது ஆடுகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக வந்து சென்றுள்ளார். அவருடன் நொச்சிக்குளத்தைச் சேர்ந்த சந்தனமரியான் மகன் ஜேசுராஜ் (வயது 47) என்பவரும் வந்துள்ளார்.
இந்த நிலையில் பெண் மருத்துவர் கால்நடை மருத்துவமனைக்கு கூடுதல் பணிக்காகச் செல்லும் போதெல்லாம், ஜேசுராஜ் அவரைப் பின்தொடர்ந்து சென்று தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார். இதனை அவர் கடுமையாக கண்டித்ததுடன், ஜான்சனிடமும் இதுகுறித்து தெரிவித்துள்ளார். ஜான்சன் அவரைக் கண்டிப்பதாகக் கூறியபோதிலும், அதன் பின்னரும் ஜேசுராஜ் மற்றும் ஜான்சன் ஆகிய 2 பேரும் இணைந்து மருத்துவரைப் பின்தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்துள்ளனர்.
கடந்த மாதம் 6-ம் தேதி கலுங்குவிளையில் கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் நடைபெற்றபோது, அங்கு பைக்கில் வந்த ஜேசுராஜ் மற்றும் ஜான்சன் ஆகியோர் அந்த பெண் மருத்துவரை அவமானப்படுத்தும் நோக்கில் மீண்டும் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளனர். மேலும், இவர்களுடன் காரியாண்டி பார்பரம்மாள்புரத்தைச் சேர்ந்த சிலைஸ்டன் மனைவி மரியஞானம் என்பவரும் சேர்ந்து கொண்டு, தொலைபேசி மூலமாக ஜேசுராஜைத் திருமணம் செய்து கொள்ளுமாறு மருத்துவருக்குத் தொடர்ந்து மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளனர்.
இதுகுறித்து அந்த பெண் மருத்துவர் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் விசாரணை நடத்தி, ஜேசுராஜ், ஜான்சன் மற்றும் மரியஞானம் ஆகிய 3 பேர் மீதும் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தார். இதையடுத்து, ஜேசுராஜை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ஜான்சன் மற்றும் மரியஞானம் ஆகிய 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.