தமிழக செய்திகள்

தமிழக மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கில் ஒருவர் கைது

ஹார்டு டிஸ்குகள் திருடப்பட்டது தொடர்பாக மின்வாரியம் சார்பில் 8 புகார்கள் கொடுக்கப்பட்டு உள்ளன

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு மின்துறை சார்ந்த ஆய்வில் ஈடுபட்டார். இந்நிலையில் கடந்த மாதம் மே 16, 17 ஆகிய தேதிகளில், மின்வாரிய தலைமை அலுவலகத்தில் குறைவான ஊழியர்கள் இருந்த சமயத்தில் சுமார் 10 ஹார்டு டிஸ்க்குகள் காணாமல் போனதாக புகார் எழுந்தது. அந்த ஹார்டு டிஸ்க்குகளில் நிலக்கரி கொள்முதல் டெண்டர் தொடர்பான தகவல்கள் இருந்ததாக கூறப்படுகிறது.

மின்வாரிய அதிகாரிகள் புகார்

இது தொடர்பாக அதிகாரிகள் சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்துள்ளனர். ஹார்டு டிஸ்குகள் திருடப்பட்டது தொடர்பாக மின்வாரியம் சார்பில் 8 புகார்கள் கொடுக்கப்பட்டு இருந்தன. மலர்விழி என்ற மின்வாரிய அதிகாரி கொடுத்த புகாரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்றது. இதில், மின்வாரிய ஒப்பந்த ஊழியர் கோபிநாத் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான கோபிநாத்தின் விசாரணை நடைபெற்று வருகிறது.

தப்பிக்க முடியாது

முன்னதாக, இந்த சம்பவம் தொடர்பாக அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் கூறியதாவது: "பல ஹார்ட் டிஸ்க்குகள் மாயமானதாக கடந்த மாதம் புகார்கள் கிடைத்திருக்கின்றன. இந்தச் சம்பவத்தில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் இருக்கும்போது எதுவும் பேசமுடியாது. காணாமல் போன ஹார்ட் டிஸ்க்குகள் குறித்து ஆய்வு செய்ய கூறியிருக்கிறோம். கணினிகளில் இருக்கும் தரவுகளை பேக்-அப் எடுத்து வைக்க உத்தரவிட்டிருக்கிறோம். ஒப்பந்த தொழிலாளர்கள் நியமனம் தொடர்பான ஆவணங்களும் காணவில்லை. எந்த இடத்திலும் யாரும் தப்பிக்க முடியாது.

மின் தடை ஏன்?

காற்றாலைகளில் ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக மின்தடைகள் ஏற்பட்டு வருகின்றன. எந்தவித நோக்கமும் இல்லாமல் யாரும் ஹார்ட் டிஸ்க்குகளைத் திருடியிருக்க மாட்டார்கள். விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. கடந்த ஆட்சியில் இருந்த டெண்டர் தொடர்பான விவரங்கள் மாயமாகியுள்ளன. இந்தத் திருட்டுச் சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது" எனத் தெரிவித்துள்ளார்.