திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே தேர்வாய்க்கண்டிகையில் எத்தனால் தயாரிக்கும் சிப்காட் ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் ஏராளமானோர் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில், இன்று காலை ஆலையில் உள்ள தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது தொட்டிக்குள் இறங்கி வேலை செய்து கொண்டிருந்த ஒடிசாவை சேர்ந்த தனஞ்செய் மாலி என்பவர் திடீரென விஷவாயு தாக்கி மயங்கி விழுந்துள்ளார். அவரை காப்பாற்ற மற்ற 4 பேரும் அடுத்தடுத்து தொட்டிக்குள் இறங்கியுள்ளனர். ஆனால், அவர்களும் விஷவாயு தாக்கி அங்கேயே மயக்கமடைந்தனர்.
இதுகுறித்த தகவலின் பேரில் அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், பாதுகாப்பு உபகரணங்களுடன் தொட்டிக்குள் இறங்கி ஐந்து பேரையும் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இதில் தனஞ்செய் மாலி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற 4 பேரும் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.