நெல்லை,
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே வெள்ளாங்குளி பகுதியைச் சேர்ந்தவர் நெசவாளரான ராம்குமார் (வயது 49). இவருடைய மனைவி மங்கையர் திலகம். இந்த தம்பதிக்கு வெங்கட் ஸ்ரீ, அருண், தரண் ஆகிய 3 மகன்கள் உள்ளனர். இவர்கள் 3 பேரும் வெள்ளாங்குளி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்தனர். மூத்த மகன் வெங்கட் ஸ்ரீ கடந்த 2023-ம் ஆண்டு பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்றார். பின்னர் கடந்த 2 ஆண்டுகளாக நீட் தேர்வு எழுதியும் போதிய மதிப்பெண்கள் கிடைக்கவில்லை. இந்த ஆண்டும் அவர் நீட் தேர்வு எழுதியதில் 720-க்கு 440 மதிப்பெண்கள் பெற்றார்.
இதேபோன்று அவருடைய தம்பிகளான இரட்டையர்கள் அருண், தரண் ஆகியோரும் இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வில் வெற்றி பெற்று நீட் தேர்வு எழுதினர். இதில் அவர்கள் முறையே 511 மற்றும் 494 மதிப்பெண்கள் பெற்றனர். இதையடுத்து 7.5 சதவீத அரசு பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டின் கீழ் நடைபெற்ற மருத்துவக் கலந்தாய்வில் 3 பேருக்கும் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது. வெங்கட் ஸ்ரீக்கு நாகர்கோவில் பல் மருத்துவக் கல்லூரியிலும், அருணுக்கு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியிலும், தரணுக்கு கோவை பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரியிலும் இடம் கிடைத்துள்ளது. எனவே சகோதரர்களை அனைவரும் பாராட்டினர்.