தமிழக செய்திகள்

தஞ்சையில் தனியார் உணவகத்தில் ஏசி எந்திரம் வெடித்து ஒருவர் பலி: 5 பேர் படுகாயம்

விபத்தில் காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை முரசொலி எம்.பி., விஜய் சரவணன் எம்.எல்.ஏ. ஆகியோர் பர்வையிட்டு நலம் விசாரித்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மேரீஸ் கார்னர் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தின் தரைத்தளத்தில் தனியார் உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் நேற்று மாலை வழக்கம்போல் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அந்த உணவகத்தின் உணவு தயாரிக்கும். கூடத்தில் உள்ள ஏ.சி.யில் பழுது ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஏ.சி. மெக்கானிக்கான நாஞ்சிக்கோட்டை சாலையை சேர்ந்த கணேசன்(வயது 43) என்பவர், ஏ.சி.க்கான கியாஸ் நிரப்பும் பணியில் ஈடுப்பட்டு இருந்தார். அப்போது சிலிண்டரில் ஏற்பட்ட அழுத்ததினால் ஏ.சி. எந்திரத்தில் இருந்த சிலிண்டர் வெடித்தது. இதனால் ஏற்பட்ட அதிர்வினால் கட்டிடம் முழுவதும் உள்ள ஜன்னல், கதவு கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. ஏ.சி. எந்திரத்தின் பாகங்களும் வெடித்து சிதறியது. மேலும் அருகில் இருந்த மற்ற ஏ.சி. எந்திரங்களும் சேதம் அடைந்தன.

இந்த விபத்தில், ஏ.சி. மெக்கானிக் கணேசன் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அப்போது ஏ.சி. பழுது பார்க்கும் பணியை கண்காணித்துக் கொண்டு இருந்த தனியார் உணவக ஊழியர்களான பொன்னாவரை பகுதியை சேர்ந்த ஜோதி மகன் ரவிராஜ்(27), திருவையாறு அருகே குழிமாத்தூர் அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்த சவேரியார் மகன் அருண்குமார்(26). மற்றும் ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவன ஊழியர்களான மானோஜிப்பட்டி வனதுர்கா நகரை சேர்ந்த கலியபெருமாள் மகன் கதிரேசன்(24), செங்கிப்பட்டி கீழத்தெருவை சேர்ந்த துரைசாமி மகன் பிரேம்(26), ரெட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்த லட்சுமணன் மகன் அஜித்குமார்(22) ஆகியோரும் படுகாயம் அடைந்தனர்.

இந்த நிலையில் ஏ.சி.எந்திரத்தில் இருந்த சிலிண்டர் வெடித்த சத்தம் பல மீட்டர் தூரம் எதிரொலித்தது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். மேலும் விபத்து நடந்த இடத்திற்கு பொதுமக்களும் திரண்டு வந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள், தஞ்சை தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதற்கிடையே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ரவிராஜ் என்பவர் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார்.

விபத்து நடந்த இடத்திற்கு தஞ்சை நகர துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் சுதா மற்றும் போலீசார் வந்து பார்வையிட்டனர். மேலும் இது குறித்து தஞ்சை தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே விபத்தில் காயம் அடைந்து மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை முரசொலி எம்.பி., விஜய் சரவணன் எம்.எல்.ஏ. ஆகியோர் பர்வையிட்டு நலம் விசாரித்ததுடன், உரிய சிகிச்சை அளிக்குமாறு டாக்டர்களிடம் கேட்டுக் கொண்டனர்.