விபத்து 
தமிழக செய்திகள்

ஆலங்குளத்தில் லாரி மோதி ஒருவர் பலி: ஓட்டுநர் கைது

விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர், வாகனத்தை நிறுத்தாமல் தாறுமாறாக ஓட்டி தப்பிச் செல்ல முயன்றார்.

தென்காசி,

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் சாலையோரம் நின்றிருந்த இருசக்கர வாகன ஓட்டி மீது லாரி மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற லாரியை இளைஞர்கள் துரத்திச் சென்று மடக்கிப் பிடித்தனர்.

பெட்ரோல் நிரப்பிவிட்டு நின்றபோது விபத்து

ஆலங்குளம் அருகேயுள்ள குறிப்பன்குளத்தைச் சேர்ந்த சண்முகவேல் மகன் ஜார்ஜ் (வயது 52). இவர் ஆலங்குளத்தில் பழைய கார் விற்பனையகம் நடத்தி வந்தார். இந்த நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு தென்காசி சாலையில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் தனது இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பியுள்ளார்.

பின்னர் சாலையைக் கடப்பதற்காக ஓரமாக வாகனத்தை நிறுத்திவிட்டு நின்றிருந்தார். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த லாரி, எதிர்பாராத விதமாக ஜார்ஜ் மீது பயங்கரமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

துரத்திப் பிடித்த இளைஞர்கள்

விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர், வாகனத்தை நிறுத்தாமல் தாறுமாறாக ஓட்டி தப்பிச் செல்ல முயன்றார். இதைக் கண்ட அங்கிருந்த இளைஞர்கள், உடனடியாக தங்களது வாகனங்களில் லாரியை துரத்திச் சென்று சினிமா பாணியில் மடக்கிப் பிடித்தனர். பின்னர் லாரி ஓட்டுநரைப் பிடித்து ஆலங்குளம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீசார் விசாரணை

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆலங்குளம் போலீசார், உயிரிழந்த ஜார்ஜின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பிடிபட்ட லாரி ஓட்டுநரைக் கைது செய்த போலீசார், விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT