தமிழக செய்திகள்

ஆட்சியமைத்து நாளையுடன் ஒரு மாதம் நிறைவு: முதல்-அமைச்சர் விஜய்யின் செயல்பாடு எப்படி..? - ஒரு அலசல்

முதல்-அமைச்சராக பதவியேற்ற அன்றைய தினம் 3 கோப்புகளில் விஜய் கையெழுத்து போட்டார்.

சென்னை,

தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் 23-ந் தேதி 17-வது சட்டசபை தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை மே மாதம் 4-ந் தேதி நடந்த நிலையில், திராவிட கட்சிகளை (தி.மு.க., அ.தி.மு.க.) பின்னுக்குத்தள்ளி, அரசியலுக்கு புது வரவான தமிழக வெற்றிக் கழகம் அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

என்றாலும், பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்கள் த.வெ.க.வுக்கு கிடைக்காமல் போனதால், ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடித்தது. ஒரு வழியாக, காங்கிரஸ் (5), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு (2), இந்திய கம்யூனிஸ்டு (2), விடுதலை சிறுத்தைகள் கட்சி (2), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (2) ஆகிய கட்சிகள் ஆதரவு அளித்ததால், த.வெ.க.வின் (107) பெரும்பான்மைக்கு தேவையான 120 இடங்கள் கிடைத்தன.

முதல்-அமைச்சர் விஜய்

அதனைத் தொடர்ந்து, கடந்த மாதம் (மே) 10-ந் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற பிரமாண்ட விழாவில், தமிழகத்தின் 12-வது முதல்-அமைச்சராக விஜய் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றனர். தொடர்ந்து, மே 21-ந் தேதி நடைபெற்ற 2-வது அமைச்சரவை விரிவாக்கத்தில் 23 பேரும், 22-ந் தேதி நடைபெற்ற 3-வது அமைச்சரவை விரிவாக்கத்தில் 2 பேரும் அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர். அனைவருக்கும் துறைகளும் ஒதுக்கப்பட்டுவிட்டன.

தமிழக முதல்-அமைச்சராக விஜய் பொறுப்பேற்று நாளையுடன் (ஜூன் 10) ஒரு மாத காலம் நிறைவடைகிறது. பதவியேற்ற நாள் முதல் இந்த ஒரு மாதத்தில் அவருடைய செயல்பாடுகள் எப்படி?, என்னென்ன கூட்டங்களை நடத்தினார்?, என்னென்ன புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்? என்பதை தேதி வாரியாக தொடர்ந்து பார்ப்போம்.

கட்டணமில்லா மின்சாரம்

10-5-2026:- முதல்-அமைச்சராக பதவியேற்ற அன்றைய தினம் 3 கோப்புகளில் விஜய் கையெழுத்து போட்டார். "2 மாதங்களுக்கு 500 யூனிட்டுகள் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு மின்நுகர்வோர்களுக்கு 2 மாதங்களுக்கு 200 யூனிட்டுகள் கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படும். பெண்களின் பாதுகாப்புக்காக சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை மாநிலம் முழுவதும் உருவாக்கப்படும். தமிழ்நாட்டில் போதைப் பொருள் கலாசாரத்தை ஒழிக்க, 65 போதைப்பொருட்கள் தடுப்பு படை அமைக்கப்படும்" என்பவைதான் அவை.

வெள்ளை அறிக்கை

தொடர்ந்து பேசிய முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், "தமிழக அரசின் கஜானா துடைக்கப்பட்டிருக்கிறது. ரூ.10 லட்சம் கோடி கடன் இருக்கிறது. தமிழக அரசின் நிதிநிலை தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்" என்று அறிவித்தார்.

டாஸ்மாக் மூடல்

11-5-2026:- கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு தலங்கள் அருகே செயல்படும் டாஸ்மாக் கடைகளை கண்டறிந்து மூடுவதற்கு முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டார்.

12-5-2026:- மொத்தம் 717 டாஸ்மாக் கடைகள் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு தலங்கள் அருகே இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, முதல் நாளில் 50 கடைகள் மூடப்பட்டன.

13-5-2026:- தமிழக சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. அரசு வெற்றி பெற்றது. ஆதரவாக 144 வாக்குகளும், எதிராக 22 வாக்குகளும் கிடைத்தன. 5 பேர் நடுநிலை வகித்தனர். தி.மு.க. வெளிநடப்பு செய்தது. பின்னர் பேசிய முதல்-அமைச்சர் விஜய், "மக்கள் நலனே எங்களுக்கு முக்கியம். முந்தைய அரசின் நலத் திட்டங்கள் தொடரும்" என்று உறுதி அளித்தார்.

அகவிலைப்படி உயர்வு

14-5-2026:- அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 2 சதவீதம் உயர்த்தி வழங்க முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டார். அதாவது, அகவிலைப்படி 58 சதவீதத்தில் இருந்து 60 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதன் மூலம் 16 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அன்றைய தினம், "ஜவுளி தொழிலுக்கு கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யவேண்டும்" என்று பிரதமர் நரேந்திரமோடிக்கு முதல்-அமைச்சர் விஜய் கடிதம் எழுதினார். பிரதமர் மோடிக்கு அவர் எழுதிய முதல் கடிதம் இது.

15-5-2026:- தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், தொழில் நிறுவன அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தினார். இதில், பி.எம்.டபிள்யூ. குழும மேலாண்மை இயக்குநர் தாமஸ் டோஸ், யமஹா மோட்டார்ஸ் இந்தியா குழுமத்தின் தலைவர் ஜிம் ஆட்டா, டாபே நிறுவனத்தின் தலைவர் மல்லிகா சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

16-5-2026:- பள்ளி, கல்லூரிகள் அருகே போதைப்பொருள் விற்பனையை தடுக்க தொடர் சோதனை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும், மே 10-ந் தேதி முதல் 200 யூனிட் இலவச மின்சாரம் கணக்கிட உத்தரவிடப்பட்டது.

17-5-2026:- முதல்-அமைச்சராக விஜய் பதவியேற்ற பிறகு, முதல் முறையாக மே 22-ந் தேதி பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகின. (ஆனால், அவர் மே 27-ந் தேதிதான் டெல்லி சென்றார்)

அம்மா உணவகம்

18-5-2026:- தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களை சீரமைத்து சுவையுடன் கூடிய தரமான உணவுகளை விநியோகம் செய்யுமாறு அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டார். மேலும், முதல்-அமைச்சரின் செயலாளர்களாக நியமிக்கப்பட்ட, செந்தில்குமார் (செயலாளர் 1), லட்சுமி பிரியா (செயலாளர் 2), அண்ணாதுரை (செயலாளர் 3), விஷ்ணு (கூடுதல் செயலாளர்) ஆகியோர்களுக்கு துறைகள் ஒதுக்கப்பட்டன.

அதேபோல், அன்றைய தினம் முதல்-அமைச்சர் விஜய்யுடன் தொழில், வர்த்தக அமைப்பினர் ஆலோசனை மேற்கொண்டனர்.

19-5-2026:- தமிழகத்திற்கு தேவையான உரங்களை தடையின்றி வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடிக்கு முதல்-அமைச்சர் விஜய் கடிதம் எழுதினார்.

20-5-2026:- காஞ்சீபுரம் மாவட்டத்தில் டெண்டர் முறைகேட்டில் ஈடுபட்ட 2 பெண் அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதே நாளில், தமிழ்நாடு முழுவதும் மருத்துவ நடவடிக்கைகளுக்காக 40 புதிய வாகனங்களை முதல்-அமைச்சர் விஜய் தொடங்கிவைத்தார். சிங்கப்பெண் அதிரடிப்படை ஐ.ஜி.யாக பவானீஸ்வரி நியமிக்கப்பட்டார்.

மின் கட்டணம்

21-5-2026:- தமிழக அமைச்சரவை 2-வது விரிவாக்கத்தில் 23 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர். 59 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 2 பேர் அமைச்சரவையில் இடம்பெற்றனர். அதே நாளில், "மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் அரசுக்கு இல்லை" என்று அத்துறையின் அமைச்சர் நிர்மல்குமார் கூறினார்.

22-5-2026:- "அரசு அலுவலகங்களில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் நடந்த பண வசூலை தடுத்துவிட்டோம்" என்று அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கூறினார். தமிழக அமைச்சரவை 3-வது விரிவாக்கத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ஷாஜகான், வன்னி அரசு ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். அதே நாளில், "அரசு நிர்வாகத்தில் த.வெ.க.வினர் தலையிடக்கூடாது" என்று அமைச்சர் என்.ஆனந்த் எச்சரிக்கை விடுத்தார். மேலும், சென்னை கோட்டை வளாகத்தை முதல்-அமைச்சர் விஜய் பேட்டரி காரில் சுற்றிப்பார்த்தார்.

844 ரவுடிகள் கைது

23-5-2026:- "கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத்தர அரசு நடவடிக்கை எடுக்கும்" என்று முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் உறுதியளித்தார். அதே நாளில், தமிழகத்தில் 3 நாட்களில் 844 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. மேலும், "பணியாளர்கள் காலை 10 மணிக்குள் அலுவலகத்திற்கு வர வேண்டும்" என்று பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை விடுத்தது.

24-5-2026:- பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரை தொலைபேசியில் தொடர்புகொண்டு முதல்-அமைச்சர் விஜய் ஆறுதல் கூறினார். குடும்பத்திற்கு நிவாரண உதவியாக ரூ.7 லட்சம் வழங்கப்பட்டது.

25-5-2026:- குறு விவசாயிகள் வாங்கிய ரூ.50 ஆயிரம் பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டார். இதன் மூலம் 14 லட்சத்து 22 ஆயிரம் விவசாயிகள் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், திரைப்படங்கள் வெளியாகும் நாள் முதல் 7 நாட்களுக்கு தினசரி 5 காட்சிகள் திரையிட அனுமதி அளித்து முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டார். அதே நாளில், "பாலியல் வழக்குகளை விரைவாக நடத்தி குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும்" என்று அதிகாரிகளை முதல்-அமைச்சர் விஜய் கேட்டுக்கொண்டார்.

26-5-2026:- "கோடை வெயில் சுட்டெரிப்பதை தொடர்ந்து, பள்ளிகள் ஜூன் 4-ந் தேதி திறக்கப்படும்" என்று தமிழக அரசு அறிவித்தது. அதற்கு முன்னதாக, ஜூன் 1-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதே நாளில், "மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும்" என்று பிரதமர் நரேந்திரமோடிக்கு முதல்-அமைச்சர் விஜய் கடிதம் எழுதினார்.

27-5-2026:- முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக டெல்லி பயணம் மேற்கொண்ட விஜய், பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து பேசினார். அப்போது, மேகதாது அணை, தமிழக மீனவர் பிரச்சினை உள்பட 4 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அவரிடம் அளித்தார். மேலும், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்த முதல்-அமைச்சர் விஜய், கோவை, மதுரை, ஓசூரில் நிறைவேற்ற இருக்கும் மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்க கோரிக்கை விடுத்தார்.

மேகதாது அணை

28-5-2026:- டெல்லியில் சட்ட நிபுணர்களுடன் முதல்-அமைச்சர் விஜய் ஆலோசனை நடத்திய நிலையில், மேகதாது அணை திட்டத்திற்கு தடைகோரி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

29-5-2026:- தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு புதிய டி.ஜி.பி.யாக மகேஷ்குமார் அகர்வால் நியமிக்கப்பட்டார். அதே நாளில், திருச்செந்தூர் முருகன் கோவிலில் முககவசம் அணிந்து சென்று ஆய்வு பணியில் ஈடுபட்ட அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷிடம் ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அர்ச்சகர் உள்பட 5 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

30-5-2026:- தமிழ்நாடு அரசின் குற்ற வழக்கு தொடர்வுத்துறை இயக்குனர் ஜி.கிருஷ்ணராஜாவை அதிரடியாக பதவிநீக்கம் செய்தது தமிழக அரசு. மேலும், திட்ட, கட்டிட அனுமதிகளை உள்ளாட்சி அமைப்புகள் குறிப்பிட்ட காலவரையறைக்குள் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது.

31-5-2026:- அகத்தியர் மலையில் 6 மாதங்களுக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றுங்கள் என்று தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

1-6-2026:- லஞ்சம், ஊழல், பாகுபாடு இல்லாத ஆட்சியை தருவேன் என்றும், நதிநீர் பங்கீடு உள்ளிட்ட மாநில உரிமைகளை ஒருபோதும் விட்டுக்கொடுக்கமாட்டேன் என்றும் திருச்சியில் நடைபெற்ற வாக்காளர்கள் நன்றி தெரிவிப்பு கூட்டத்தில் முதல்-அமைச்சர் விஜய் பேசினார்.

2-6-2026:- வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் ஜல் ஜீவன் மிஷன் 2.0 திட்டத்திற்கு மத்திய அரசு, தமிழகம் இடையே முதல்-அமைச்சர் விஜய் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும், குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கான தடையை மேலும் ஓராண்டு நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. அதே நாளில், முதல்-அமைச்சர் விஜயை சென்னை தலைமைச்செயலகத்தில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் சந்தித்து பேசினார்.

3-6-2026:- டெண்டர் நடைமுறைகள் மற்றும் கட்டிட வரைபட அனுமதி வழங்கும் செயல்முறைகளில் முழுமையான வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்று அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டது.

6-6-2026:- போக்குவரத்து துறையில் வேலைக்கு பணம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று கவர்னர் அர்லேகருக்கு தமிழக அரசு கடிதம் எழுதியது.

7-6-2026:- கூட்ட நெரிசல், முறைகேடுகளை தடுக்கும் வகையில், 50 முக்கிய கோவில்களில் ஆன்லைன் முன்பதிவு தரிசன முறை நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் கூறினார்.

8-6-2026:- நார்வே செஸ்-2026 தொடரில் பட்டம் வென்ற தமிழக வீரர் பிரக்ஞானந்தாவுக்கு தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ரூ.50 லட்சம் ஊக்கத்தொகையினை முதல்-அமைச்சர் விஜய் வழங்கினார். மேலும், பிரக்ஞானந்தாவுடன் செஸ் விளையாடி அசத்தினார்.

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டம்

9-6-2026:- குழந்தைகள், பெண்கள் பாதுகாப்புக்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை இன்று மாலை முதல்-அமைச்சர் விஜய் தொடங்கிவைக்கிறார்.

ஒரு மாத கால ஆட்சி.. குற்றச்சாட்டுகள்.. த.வெ.க. தரப்பினர் கூறுவதென்ன..?

த.வெ.க. அரசின் ஒரு மாத கால ஆட்சியில், சட்டம் - ஒழுங்கு பிரச்சினை, பாலியல் துன்புறுத்தல்கள், மின் தடை பிரச்சினைகள், குப்பைகள் சரியாக அகற்றாதது உள்ளிட்ட பிரச்சினைகள் இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஆனால், வெளிப்படைத்தன்மையோடு வழக்குப்பதிவு செய்வதால் குற்றங்கள் அதிகரித்துள்ளது போல் தெரிவதாகவும், மாநகராட்சி - நகராட்சிகளில் இன்னும் தி.மு.க.வினரே பெரும்பாலான பதவிகளில் இருப்பதால், வழக்கமான பணிகளை முறையாக செய்யாமல் ஆளுங்கட்சிக்கு கெட்டப்பெயர் ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் த.வெ.க. தரப்பினர் கூறுகிறார்கள். ஆனால், இவை அனைத்தும் விரைவில் சரிசெய்யப்படும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.