சென்னை,
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் (TANGEDCO/TNEB) சார்பில் 2020-ம் ஆண்டு 364 உதவி மின் பொறியாளர் (Assistant Engineer – Electrical) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால், நிர்வாக மற்றும் சட்டரீதியான பல்வேறு காரணங்களால் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் நீண்ட காலம் தாமதமடைந்தன. இதனால் தேர்வுக்காக பல ஆண்டுகளாக தயாராகி காத்திருந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தாமதம் தேர்வர்களின் தவறால் ஏற்பட்டதல்ல. அரசின் நிர்வாக நடைமுறைகளில் ஏற்பட்ட காலதாமதம் காரணமாகவே பலர் தற்போது அரசு பணிகளுக்கான வயது வரம்பை கடந்துள்ளனர். இதனால், எதிர்காலத்தில் நடைபெறும் அரசு பணியாளர் தேர்வுகளில் பங்கேற்கும் வாய்ப்பையே அவர்கள் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, மின்பொறியியல் துறையில் பட்டப்படிப்பை முடித்து அரசு பணியில் சேர வேண்டும் என்ற கனவுடன் பல ஆண்டுகள் உழைத்து வந்த இளைஞர்களுக்கு இந்த நிலை மிகுந்த ஏமாற்றத்தையும் மனஉளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது. அரசு நிர்வாகத்தின் தாமதத்திற்காக தேர்வர்கள் தண்டிக்கப்படக் கூடாது என்பதே இயற்கை நீதியின் அடிப்படை கோட்பாடாகும்.
கடந்த காலங்களிலும் இதுபோன்ற அசாதாரண சூழ்நிலைகளில் தமிழக அரசும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமும் (TNPSC) பாதிக்கப்பட்ட தேர்வர்களின் நலனை கருத்தில் கொண்டு ஒருமுறை சிறப்பு வயது தளர்வு வழங்கிய முன்னுதாரணங்கள் உள்ளன. அதேபோன்று, AE (Electrical) தேர்வர்களின் நியாயமான கோரிக்கையையும் தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும்.
எனவே, தமிழ்நாடு மின்சார வாரியத்தின் 2020-ம் ஆண்டு உதவி மின் பொறியாளர் ஆட்சேர்ப்பு தாமதத்தால் வயது வரம்பை கடந்துள்ள அனைத்து பாதிக்கப்பட்ட தேர்வர்களுக்கும் எதிர்கால அரசு பணியாளர் தேர்வுகளில் பங்கேற்கும் வகையில் “ஒருமுறை சிறப்பு வயது தளர்வு” வழங்க தமிழக அரசு உடனடியாக சிறப்பு அரசாணை வெளியிட வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.