தமிழக செய்திகள்

வள்ளியூர் அரசு மருத்துவமனை மருத்துவர், செவிலியர்களுக்கு கொலை மிரட்டல்: வாலிபருக்கு ஒரு ஆண்டு சிறை

வள்ளியூர் அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த உதவி மருத்துவர் மற்றும் செவிலியர்களை வாலிபர் ஒருவர் அவதூறாகப் பேசி, கொலை மிரட்டல் விடுத்தார்.

திருநெல்வேலி,

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் அரசு மருத்துவமனை மருத்துவர் மற்றும் செவிலியர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபருக்கு ஒரு ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

மருத்துவர், செவிலியர்களுக்கு கொலை மிரட்டல்

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் அரசு மருத்துவமனையில் கடந்த 2015-ம் ஆண்டு பணியில் இருந்த உதவி மருத்துவர் கார்த்திகேயன் மற்றும் செவிலியர்களை அவதூறாகப் பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாக வள்ளியூரைச் சேர்ந்த வீரமணி(எ) வீரமணிகண்டன் (வயது 28) மற்றும் ஜெயசீலன் ஆகிய 2 பேர் மீது வள்ளியூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

வாலிபருக்கு ஒரு ஆண்டு சிறை

இந்த வழக்கில் அப்போதைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனி புலன் விசாரணை மேற்கொண்டு, நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்தார். இந்த நிலையில், இன்று (18.11.2026) வள்ளியூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் முடிவில், நீதித்துறை நடுவர் மோசஸ் ஜெபசிங், குற்றவாளி வீரமணி(எ) வீரமணிகண்டனுக்கு IPC 294(b) பிரிவின் கீழ் 3 மாதங்கள் சிறை தண்டனையும், IPC 353 பிரிவின் கீழ் ஒரு ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், IPC 506(1) பிரிவின் கீழ் 6 மாதங்கள் கடுங்காவல் சிறைத் தண்டனையும் விதித்து, அனைத்துத் தண்டனைகளையும் ஏககாலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார். குற்றம் சாட்டப்பட்ட 2-வது நபரான ஜெயசீலன் சாட்சியங்கள் மூலம் குற்றம் நிரூபிக்கப்படாததால் விடுதலை செய்யப்பட்டார்.

SCROLL FOR NEXT