சென்னை
கோயம்பேடு மார்க்கெட்டில் வெங்காயம் கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வெங்காயத்தின் விலை மீண்டும் உச்சம் தொட்டுள்ளது. கடந்த ஆகஸ்டு மாதம் 7-ந்தேதி ஒரு கிலோ வெங்காயம் (முதல் ரக நாசிக் வெங்காயம்) ரூ.35-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த வெங்காய விலை படிப்படியாக ஆகஸ்டு 23-ந்தேதி கிலோ ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இதன்பின்னர் கடந்த செப்டம்பர் மாதம் 22-ந்தேதி கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்து தேசிய வேளாண்மை கூட்டுறவு விற்பனை இணையம் மற்றும் தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு ஆகியவற்றின் மூலம் நாசிக்கில் இருந்து வெங்காயம் கொள்முதல் செய்து கடந்த செப்டம்பர் 3-ந்தேதி முதல் நகர்ப்புற ரேஷன் கடைகளில் ஒரு ரேஷன் அட்டைக்கு ஒரு கிலோ வெங்காயம் ரூ.35-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
எனினும், வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து கடந்த செப்டம்பர் 22-ந்தேதி கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன்பிறகு வெங்காயத்தின் விலை படிப்படியாக குறைந்து கடந்த 20-ந்தேதி ஒரு கிலோ வெங்காயம் (முதல் ரக நாசிக் வெங்காயம்) ரூ.46-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், கடந்த சில தினங்களில் வெங்காயம் விலை மீண்டும் கிடுகிடுவென உயர்ந்து நேற்று கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதே நேரத்தில் ஆந்திர வெங்காயம் சிறியது கிலோ ரூ.36. பெரியது கிலோ ரூ.42-க்கும் விற்பனை செய்யப்பட்டது. கர்நாடக வெங்காயம் சிறியது கிலோ ரூ.38-க்கும் பெரியது கிலோ ரூ.60-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
நாசிக் வெங்காயம் சிறியது கிலோ ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து கோயம்பேடு வெங்காய மொத்த வியாபாரி ரகுநாத் கூறும்போது, நவராத்திரி பண்டிகை காலத்தில் வடமாநில விவசாயிகள் போதிய அளவு விளைபொருட்களை சந்தைக்கு கொண்டு வரவில்லை. இதனால், கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வெங்காய வரத்து குறைந்து, அதன் விலை உயர்ந்துள்ளது.
தீபாவளி பண்டிகைக்கு பிறகு புதிய வெங்காயம் அறுவடையாவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே, தீபாவளிக்கு முன்பு தங்களிடம் இருக்கும் வெங்காயங்களை முழுவதுமாக வடமாநில வியாபாரிகள் அனுப்பி வைக்கக்கூடும். இதனால், மீண்டும் வெங்காய வரத்து அதிகரித்து நாளை (திங்கட்கிழமை) அல்லது நாளை மறுநாள் முதல் வெங்காய விலை ஓரளவுக்கு குறைய வாய்ப்புள்ளது.
எனினும், தீபாவளி பண்டிகை நவம்பர் 8-ந்தேதி வரவிருப்பதால் தேவை அதிகரிப்பை கருத்தில் கொண்டு நவம்பர் முதல் வாரத்தில் வெங்காய விலை மீண்டும் உயரக்கூடும். தீபாவளிக்கு பிறகு புதிய வெங்காயம் அறுவடையாகி வரத்து அதிகரிக்கும்போது வெங்காய விலை வெகுவாக குறையும் என்று எதிர்பார்க்கிறோம் என அவர் கூறினார்.
கோயம்பேடு மார்க்கெட்டில் வெங்காய மொத்த விலை அதிகரித்துள்ள நிலையில், சென்னை வெளி மார்க்கெட்டுகளில் வெங்காயம் கிலோ ரூ.60 முதல் ரூ.80 வரை விற்பனை செய்யப்படுகிறது.