சென்னை,
தமிழ்நாடு மாநில வாணிபக் கழகமான டாஸ்மாக் சார்பில், கடைகளில் நீண்ட வரிசையில் நிற்பதைத் தவிர்க்கும் வகையில் ஆன்லைன் மதுவிற்பனை முறை கடந்த 7-ந்தேதி முதல் அறிமுகப்படுத்தப்பட்டது. இது வீடு தேடி மதுபாட்டில்கள் விநியோகிக்கும் திட்டம் அல்ல. tasmac.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக முன்பதிவு செய்து கடைகளில் பெற்றுக்கொள்ளும் வசதியாகும்.
ஆனால் இதில் சில நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக கடை ஊழியர்கள் தெரிவித்தனர். இதனால் சில கடைகளில் மதுப்பிரியர்கள்-கடை ஊழியர்கள் இடையே வாக்குவாதமும் ஏற்படுவதாக சொல்லப்பட்டது.
இத்திட்டம் தொடங்கப்பட்ட முதல் நாளில் ரூ.11.62 லட்சமும், இரண்டாவது நாளான நேற்றுமுன்தினம் 3 ஆயிரம் முன்பதிவுகள் வாயிலாக ரூ.9 லட்சம் மதிப்பிலுமான மதுபாட்டில்களே ஆன்லைனில் முன்பதிவு செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டன.
அன்றைய தினம் டாஸ்மாக் கடைகளின் மொத்த மதுவிற்பனை ரூ.162 கோடியே 37 லட்சமாக இருந்த நிலையில், ஆன்லைன் விற்பனை ஒரு சதவீதத்துக்கும் குறைவாகவே பதிவாகியுள்ளது. இதனால், ஆன்லைன் மதுவிற்பனைக்கு மதுப்பிரியர்கள் வரவேற்பு காட்டவில்லையோ? என்ற கேள்வி எழுந்துள்ளது.