சென்னை,
தமிழகத்தில் ஏப்ரல் 23-ந் தேதி நடைபெற உள்ள 17-வது சட்டசபை தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவுகிறது.
ஆளும் கட்சியான தி.மு.க., 26 கட்சிகளுடன் மெகா கூட்டணி அமைத்துள்ளது. அதில், 13 கட்சிகளுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளது. அதிகபட்சமாக, கூட்டணியில் உள்ள தேசிய கட்சியான காங்கிரசுக்கு 28 தொகுதிகளை கொடுத்துள்ளது. இதில், 11 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என அடையாளம் காணப்பட்டுவிட்டாலும், 17 தொகுதிகளில் இழுபறி நிலை நீடிக்கிறது. அதாவது, பொன்னேரி, உதகமண்டலம், ஈரோடு கிழக்கு, சிவகாசி, நாங்குநேரி, குளச்சல், வேளச்சேரி, கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர், கடலூர், சோளிங்கர், பென்னாகரம், உசிலம்பட்டி, மேலூர் ஆகிய தொகுதிகளில் வேட்பாளர்கள் தேர்வில் கடும் போட்டி நிலவுகிறது.
இந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை தமிழக காங்கிரஸ் தலைவர் தயாரித்தாலும், அதற்கு அகில இந்திய காங்கிரஸ் தலைமைதான் ஒப்புதல் அளிக்க வேண்டும். ஆனால், காங்கிரஸ் கட்சியில் ஏற்கனவே பல கோஷ்டிகள் இருப்பதால், அனைத்து தலைவர்களும் டெல்லியில் முகாமிட்டு, தங்களுடைய ஆதரவாளர்களுக்கு சீட் கேட்டு வருகின்றனர்.
அதே நேரத்தில், பணம் பெற்றுக்கொண்டு வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்பட்டதாக, கட்சித் தலைவர் ராகுல்காந்திக்கு புகார் சென்றதாகவும், அதனால் அவர் கடும் கோபத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில்தான் காங்கிரஸ் கட்சியில் வேட்பாளர்கள் தேர்வில் சிக்கல் நீடித்து வருகிறது.
தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. இடம்பெற்றுள்ளது. அந்தக் கட்சிக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. என்றாலும், பெரும்பாலான தொகுதிகள் விரும்பிய தொகுதிகள் பட்டியலில் இருந்து ஒதுக்கப்படவில்லை என்று பா.ஜ.க. தரப்பில் அதிருப்தி நிலவுகிறது. தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை, இந்தத் தேர்தலில் கோவை மாவட்டத்தில் உள்ள சிங்காநல்லூர், சூலூர் தொகுதிகளில் ஒன்றில் போட்டியிட விருப்பம் தெரிவித்ததாகவும், ஆனால், அந்த 2 தொகுதிகளையுமே அ.தி.மு.க. எடுத்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
தற்போது, மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட பா.ஜ.க. தலைமை அண்ணாமலையை வற்புறுத்தினாலும், அவர் தேர்தலில் போட்டியிடவே இல்லை என்று ஒதுங்கிக்கொண்டார். பா.ஜ.க.வுக்கு அ.தி.மு.க. ஒதுக்கிய 27 தொகுதிகளில் 5 தொகுதிகளை மாற்றித்தருமாறு பா.ஜ.க. மேலிட தலைவர்கள் வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.
ஆனால், அ.தி.மு.க. சார்பில் 165 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் 3 கட்டங்களாக வெளியிடப்பட்டுவிட்டது. ஆனால், பா.ஜ.க. தொகுதிகளை மாற்றிக் கேட்பதால், அ.தி.மு.க. வேட்பாளர்களும் இன்னும் வேட்புமனு தாக்கல் செய்யாமல் உள்ளனர். வேட்புமனு தாக்கலுக்கு வரும் 6-ந் தேதி கடைசி நாள் என்றாலும், இடையே 2 நாட்கள்தான் வேலை நாள். எனவே, அதற்குள் தொகுதிகளை மாற்றிக்கொடுக்க வேண்டிய கட்டாயம் அ.தி.மு.க.வுக்கு இருக்கிறது. ஆனால், மாற்றிக் கொடுக்குமா என்பது கேள்விக் குறிதான்.
இதுபோன்ற சூழ்நிலையில் தான், தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணிகளில் இடம்பெற்றுள்ள தேசிய கட்சிகளான காங்கிரஸ், பா.ஜ.க.வில் வேட்பாளர்கள் தேர்வில் தொடர்ந்து இழுபறி நிலை நீடித்துவருகிறது.