சென்னை,
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 103வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக சார்பில் புத்தெழுச்சி நாள் விழா பொதுக்கூட்டம் சென்னை கொளத்தூரில் நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் திமுக ஆதரவாளரும், நடிகருமான சத்யராஜ் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய சத்யராஜ், கொளத்தூரில் முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தோல்வியடைந்த நிகழ்வை சுட்டிக்காட்டி கண்ணீர் விட்டு அழுதார். மேலும், கொளத்தூர் தொகுதி மக்கள் பட்டு திருந்தினால்தான் புத்தி வரும் என்றும் அவர் கூறினார்.
கண்ணீருடன் சத்யராஜ் பேசியதாவது,
நான் பெரியாரின் தொண்டன் திராவிட கருத்தியலின் ஆதரவாளன். நான் திமுககாரன்தான். கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் வெற்றிபெற்றிருக்க வேண்டும். கஷ்டமாக உள்ளது. நான் அனைத்தையும் விளையாட்டாக எடுத்துக்கொள்வேன். ஆனால், இந்த தோல்வியை விளையாட்டாக எடுத்துக்கொள்ள முடியவில்லை.
பட்டு திருந்தினால்தான் புத்தி வரும். (கொளத்தூர் மக்கள்) பட்டு திருந்துங்கள் அப்போதுதான் புத்தி வரும். எப்படிப்பட்ட தலைவரை தோற்கடித்துள்ளோம் என்று... அண்ணா, கருணாநிதி வழியில் முதல்-அமைச்சருக்கு உதாரணமாக இருந்தவர் ஸ்டாலின்.
இன்ஸ்டாகிராமில் உள்ள தவெக ஆதரவாளர்கள் என்னை விமர்சிப்பார்கள். அதைப்பற்றி நான் கவலைப்படமாட்டேன்’ என்றார்.