திருநெல்வேலி, கன்னியாகுமரி, சங்கரன்கோவில் மற்றும் கோவில்பட்டி ஆகிய பகுதிகளில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வந்தடைந்தார். அங்கு அவர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசியதாவது:
கடந்த 2023-ம் ஆண்டு தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்தும், தி.மு.க. அரசு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை. அ.தி.மு.க. ஆட்சியில் இதுபோன்ற எச்சரிக்கை வந்தவுடன் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் தி.மு.க. அரசின் மெத்தனத்தால் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். நான் உடனடியாக வந்து மக்களைச் சந்தித்தேன். ஆனால் முதல்-அமைச்சர் ஸ்டாலின் வரவில்லை. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் 5 நாட்கள் கழித்தே வந்தார்.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டது. தி.மு.க. கூட்டணியில் உள்ளவர்களே இதைக் குறிப்பிடுகிறார்கள். தூத்துக்குடியில் 12-ம் வகுப்பு மாணவி கொலை செய்யப்பட்டதே இதற்கு ஒரு சான்று. தி.மு.க. ஆட்சியில் மக்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர்.
த.வெ.க. தலைவர் விஜய் தனது வேட்பாளர் அறிமுகத்தின் போது தி.மு.க.-த.வெ.க. என இருமுனைப் போட்டி நிலவுவதாகக் கூறியது குறித்த கேள்விக்கு: "அவர் சொன்னால் சொல்லிட்டுப் போறாரு... தேர்தல் முடிந்தால்தான் யாருக்கு எவ்வளவு செல்வாக்கு என்பது தெரியும்" என்றார்.
அ.தி.மு.க. கூட்டணியில் இணக்கமாக செயல்படுகின்றோம். எங்கள் கூட்டணியில் எந்த அதிருப்தியும் இல்லை. முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, பிரசாரத்தை தொடங்கி விரைந்து செயல்பட்டு வருகிறோம். தி.மு.க. கூட்டணியில் இதுபோன்று இல்லை. அங்குதான் கூட்டணி கட்சிகளிடையே மனவருத்தம், குழப்பம் உள்ளது. 'அழுதுகொண்டே சிரிக்கிறேன்' என்று அவர்களின் நிர்வாகிகளே கூறுகிறார்கள்.
புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நேரடியாகப் பேசாமல் மற்றவர்கள் மூலம் முதலில் 10 தொகுதிகளும், பின் 5 தொகுதிகளும் கேட்டார். எங்களால் அவ்வளவு கொடுக்க இயலாது என்று கூறிவிட்டோம். கடந்த முறை 33 தொகுதிகளில் போட்டியிட்டு 33 ஆயிரம் வாக்குகளை மட்டுமே அவர் பெற்றுள்ளார்.
"காங்கிரஸ் மற்றும் தி.மு.க. ஆட்சியில் இருந்தபோதுதான் கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டது. அதனை மீட்டெடுக்க அ.தி.மு.க.தான் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து போராடி வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.