தமிழக செய்திகள்

நிதி மேலாண்மையில் தீவிர கவனம் செலுத்தினால் மட்டும் தான் தமிழகத்தில் வளர்ச்சி தொடரும் - ஈ.ஆர். ஈஸ்வரன்

கொங்கு மண்டல மக்கள் பெரிதும் எதிர்பார்த்த அவிநாசி அத்திக்கடவு திட்ட விரிவாக்கம் பற்றி குறிப்பு ஏதும் இல்லை.

சென்னை,

நிதி மேலாண்மையில் தீவிர கவனம் செலுத்தினால் மட்டும் தான் தமிழகத்தில் வளர்ச்சி தொடரும் என்று ஈ.ஆர். ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

முதல் நிதிநிலை அறிக்கை

தவெக அரசின் முதல் நிதிநிலை அறிக்கை மக்கள் எதிர்பார்த்த திட்டங்கள் இல்லாமல் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. பள்ளியில் படிக்கின்ற வயதிலேயே தனிமனித ஒழுக்கத்தை மேம்படுத்தினால் தான் மது இல்லா தமிழகம் என்ற கனவு நனவாகும் குற்றங்கள் குறையும். ஆனால் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பில் அதற்கான முன்னெடுப்பு ஏதுமில்லை.

மாநிலத்தில் இருக்கின்ற நதிகளை இணைப்பதற்கான அறிவிப்பு உள்ளது. தேவையான நிதி இல்லை. ஆனைமலையாறு - நல்லாறு திட்டம் பற்றிய அறிவிப்பை வரவேற்கின்றோம். ஆனால் அதை சாத்தியப்படுத்துவதற்கான விளக்கங்கள் இல்லை. பாண்டியாறு - புன்னம்புழா திட்டம், திருமணிமுத்தாறு திட்டம், காவிரி உபரி நீரை வசிஷ்ட நதிக்கு கொண்டு போகும் திட்டம், மேட்டூர் உபரி நீர் திட்டம் போன்ற திட்டங்களின் பெயரே நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. கொங்கு மண்டல மக்கள் பெரிதும் எதிர்பார்த்த அவிநாசி அத்திக்கடவு திட்ட விரிவாக்கம் பற்றி குறிப்பு ஏதும் இல்லை.

சுற்றுலா

சுற்றுலா வளர்ச்சி என்பது தமிழகத்தின் வளர்ச்சிக்கு உதவக் கூடியதாகும். நிதிநிலை அறிக்கையில் சுற்றுலாத் துறையை பற்றி நிறைய பேசப்பட்டிருக்கிறது. ஆனால் வளர்ச்சிக்கான திட்டங்கள் அறிவிக்கப்படவில்லை. குறிப்பாக மருத்துவ கட்டமைப்பில் தமிழ்நாடு முன்னேற்றம் அடைந்த மாநிலமாக இருக்கிறது. சிகிச்சைக்காக பல வெளிநாட்டினரும் இங்கே வருவதை விரிவாக்க மருத்துவ சுற்றுலா ஆரம்பித்தால் வருமானம் பெருகும். ஆனால் அதைப் பற்றி எந்த அறிவிப்பும் இல்லை.

தொழில் முதலீடுகள்

கொடைக்கானல், வால்பாறை போன்ற மலைகளுக்கு ரோப் கார் வசதி செய்தால் சுற்றுலா பயணிகள் வருவது அதிகரிக்கும். புதிதாக காவிரி, வைகை, தாமிரபரணியில் நதி சுற்றுலா என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் 53 கோடி நிதியை வைத்துக்கொண்டு என்ன செய்ய முடியும். 2035-ல் 1.5 டிரில்லியன் பொருளாதாரம் என்று ஆசை காட்டப்பட்டிருக்கிறது. ஆனால் அதற்கான முன்னெடுப்பு இல்லை.

புதிய தொழில் முதலீடுகள் வந்தால் தான் அது சாத்தியம். அது நிறைவேற வேண்டுமென்றால் பரந்தூர் விமான நிலையம் அவசியம். சென்ற அரசாங்கத்தில் பரந்தூர் விமான நிலையத்தை அடிப்படையாகக் கொண்டு சுங்குவார்சத்திரம் வரை மெட்ரோ ரயில் விரிவாக்கம் அறிவிக்கப்பட்டது. சுங்குவார்சத்திரம் மெட்ரோ ரயில் பற்றி பேசிய நிதிநிலை அறிக்கை பரந்தூர் விமான நிலையத்தை பற்றி பேசவே இல்லை. கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை பற்றி இந்த அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.

கிராமப்புறங்களில் கூரை வீடுகளை மாற்றி கான்கிரீட் வீடுகளை கட்ட மாநில அரசின் மானியமாக 5 லட்சம் கொடுக்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. தொழில்நுட்ப ஜவுளிக்கான வளர்ச்சியை பற்றி அறிவித்திருப்பது ஜவுளி தொழில் வளர்ச்சிக்கு உதவும். திருப்பூர் டெக்ஸ்டைல்ஸ் சென்டர் அறிவிப்பும் ஜவுளித்துறை வளர்ச்சிக்கு உதவும்.

டாஸ்மாக் வருமானம்

போதையில்லா தமிழகத்தை நோக்கி வெற்றி தமிழகம் வீரநடை போடும் என்று அறிவித்துவிட்டு 51,000 கோடியாக இருந்த டாஸ்மாக் வருமானத்தை 55,000 கோடியாக அதிகரிக்க இலக்கு நிர்ணயித்திருப்பது முரண்பாடாக இருக்கிறது. பள்ளி கட்டமைப்பு வளர்ச்சிக்காக அறிவிக்கப்பட்டிருக்கின்ற 2.132 கோடி போதிய அளவாக இல்லை. விவசாயிகள் பெரிதும் எதிர்பார்த்த முழு விவசாய கடன் தள்ளுபடி அறிவிக்கப்படாதது ஏமாற்றமளிக்கிறது. தமிழ்நாட்டின் நிர்வாக தேவைகளுக்கே கடன் வாங்குகின்ற நிலையை இந்த நிதி நிலை அறிக்கை காட்டுகிறது. இந்த சூழலில் தமிழகம் எப்படி வளர்ச்சி பெறும். அரசு துறைகளில் செயற்கை தொழில்நுட்பம் புகுத்தப்பட்டு அதிகாரிகளின் வேலைப்பளு குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது அரசு துறைகளில் ஆட்குறைப்புக்கான நடவடிக்கையாகும். இது ஆட்குறைப்பு நடவடிக்கைகளுக்கான முன்னெடுப்பா!

சமர்ப்பிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கை புதிய அறிவிப்புகள் ஏதும் இல்லாமல் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. தமிழ்நாடு முதல்-அமைச்சர் நிதி மேலாண்மையில் தீவிர கவனம் செலுத்தினால் மட்டும்தான் தமிழகத்தில் வளர்ச்சி தொடரும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.