தமிழக செய்திகள்

‘காமராஜரின் புகழை பாடக்கூடிய தகுதி அ.தி.மு.க.வுக்கு மட்டும்தான் உண்டு’ - ராஜேந்திர பாலாஜி

காமராஜரை த.வெ.க. மட்டுமே சொந்தம் கொண்டாடுவது என்பது பொருத்தமில்லாதது என ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

விருதுநகர்,

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விருதுநகரில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம், ‘த.வெ.க.வின் கொள்கை தலைவர்களில் முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜரும் ஒருவர். தற்போது தமிழ்நாட்டில் காமராஜரின் ஆட்சி நடைபெறுகிறதா?’ என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்தபோது ராஜேந்திர பாலாஜி கூறியதாவது;-

“தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் பெருந்தலைவர் காமராஜர் ஒரு கவுரவ தலைவராகவும், வழிகாட்டியாகவும் உள்ளார். அவர் இல்லாமல் தமிழ்நாட்டில் அரசியல் இல்லை. அந்த அளவிற்கு, விரல் விட்டு எண்ணக்கூடிய சிறந்த தலைவர்களில் ஒருவராக இருப்பவர் கர்மவீரர் காமராஜர். அவரை த.வெ.க. மட்டுமே சொந்தம் கொண்டாடுவது என்பது பொருத்தமில்லாதது.

பெருந்தலைவர் காமராஜரின் உயர்வும், பண்பும் மிகப்பெரியது. அ.தி.மு.க.வை உருவாக்கிய புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., ‘எனது தலைவர் பெருந்தலைவர் காமராஜர், எனது வழிகாட்டி அறிஞர் அண்ணா’ என்று கூறியிருக்கிறார். அந்த அளவிற்கு காமராஜரை மதிக்கின்ற கட்சி அ.தி.மு.க. இன்றைக்கும் காமராஜரின் பிறந்தநாள் விழாவை பெரிய அளவில் கொண்டாடக்கூடிய கட்சி அ.தி.மு.க.தான்.

காமராஜரின் நூற்றாண்டு விழாவை முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா சிறப்பாக கொண்டாடினார். அதே போல் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் பெருந்தலைவர் காமராஜர் மீது அளவற்ற பற்றும், பாசமும் கொண்டவர். எனவே காமராஜரின் புகழை பாடக்கூடிய முழு தகுதி அ.தி.மு.க.வுக்கு மட்டும்தான் உண்டு.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.