ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி அடுத்த மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் இரவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி கரடிகள் ஊருக்குள் வந்த வண்ணம் உள்ளன. சமீப நாட்களாக கிராம பகுதிகள் மட்டுமல்லாமல், நகர பகுதிகளிலும் கரடிகள் உலா வருகின்றன. கோவில்களுக்குள் நுழைந்து பூஜை பொருட்களை சேதப்படுத்துவதும், கடைகளை உடைத்தும் அட்டகாசம் செய்து வருகின்றன. இந்தநிலையில் எடக்காடு கிராமத்துக்குள் ஒரு கரடி நுழைந்தது. பின்னர் வீட்டு மாடிகளில் ஏறி அங்கும். இங்கும் நடமாடியது.
நீண்ட நேரம் மழையில் நனைந்தவாறு மாடியில் சுற்றித்திரிந்த அந்த கரடி, மாடி விட்டு மாடி தாவி சென்றது. இதை பார்த்த மக்கள் அச்சம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து அப்பகுதி ஆண்கள் வீட்டு மாடிகளில் நின்று கரடியை விரட்டினர். இதையடுத்து அந்த கரடி கீழே இறங்கி ஓடியது. அதன் பின்னரே மக்கள் நிம்மதியடைந்தனர். கரடி மாடியில் சுற்றித்திரிந்ததை பொதுமக்கள் செல்போனில் வீடியோ எடுத்தனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.