நீலகிரி,
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா உள்பட பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கோடை வெயில் வாட்டி வதைப்பதால், அதை சமாளிக்க பிற மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது. ஊட்டியில் குளுகுளு கால நிலை நிலவுகிறது.
கோடை சீசனையொட்டி சுற்றுலா பயணிகளை கவரும் வகை யில், நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆண்டுதோறும் மே மாதம் மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, காய்கறி கண்காட்சி, வாசனை திரவிய கண்காட்சி, பழ கண்காட்சி, படகு போட்டி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
அந்த வகையில் ஊட்டியில் 128வது மலர் கண்காட்சி வரும் 18ம் தேதி தொடங்க உள்ளது. 10 நாட்கள் நடைபெறும் மலர் கண்காட்சி வரும் 28ம் தேதி நிறைவு பெற உள்ளது.
இந்த மலர் கண்காட்சியில் பல்வேறு வகையிலான மலர்கள் இடம்பெற உள்ளன. சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஜப்பான், அமெரிக்கா, ஜெர்மனி, நெதர்லாந்து போன்ற நாடுகளில் இருந்தும் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மலர் விதைகள், செடிகள் பெறப்பட்டன. அந்த மலர் செடிகள் நடவு செய்யப்பட்டன. அத மலர் செடிகள் தற்போது பூத்து குலுங்கும் சூழ்நிலையில் நாளை மறுதினம் மலர் கண்காட்சி நடைபெற உள்ளது. மலர் கண்காட்சியை காண சுற்றுலா பயணிகள் மிகுந்த ஆர்வமாக உள்ளனர்.
முன்னதாக, ஊட்டி விஜயநகரம் பகுதியில் உள்ள ரோஜா பூங்காவில் 21வது ரோஜா கண்காட்சி நடைபெற்று வருகிறது. கடந்த வியாழக்கிழமை தொடங்கிய ரோஜா கண்காட்சி வரும் 18ம் தேதி வரை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.