தமிழக செய்திகள்

ஊட்டி மலை ரெயில் சேவை இன்று ரத்து

ஊட்டி-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிந்துள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

வெலிங்டன்,

ஊட்டி மலை ரெயில் பாதையில் மண்சரிவு, பாறைகள் விழுந்து தண்டவாளம் சேதமடைந்துள்ளதால் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மலை ரெயில் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

சேதமடைந்த தண்டவாளங்கள்

நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. பருவமழை தொடங்கிய நிலையில் நீலகிரி, கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை கார ணமாக பல இடங்களில் மண்சரிவு, மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. ஊட்டி-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிந்துள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர ஊட்டி மலைரெயில் பாதையில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டும், பாறைகள் உருண்டு விழுந்தும் தண்டவாளங்கள் சேதமடைந்தன. இதனால் ஊட்டி மலைரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப் பட்டது. தற்போது தண்டவாள பகுதியில் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

சீரமைக்கும் பணி தீவிரம்

இதுகுறித்து ரெயில்வே அதிகாரி கூறுகையில், நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக குன்னூர்-மேட்டுப்பாளையம் மலை ரெயில் சேவை நேற்று முன்தினம், நேற்று, இன்று (திங்கட்கிழமை)ஆகிய 3 நாட்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில் ஹில்கிரோவ், ஆர்டர்லி உள்ளிட்ட பகுதிகளில் பெரிய அளவிலான பாறைகள் உருண்டு மலை ரெயில் பாதையில் விழுந்து உள்ளதால் பாறைகளை அகற்றும் பணியில் 30-க்கும் மேற்பட்ட ரெயில்வே பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சிறியரக பொக்லைன் எந்திரங்கள் மூலம் பாறைகள் அகற்றப்பட்டு வருகிறது. விரைவில் ரெயில் பாதையில் விழுந்துள்ள மண் மற்றும் பாறைகள் அகற்றப்பட்டு ரெயில் போக்குவரத்து தொடங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

SCROLL FOR NEXT