தமிழக செய்திகள்

ஊட்டி: இந்திய அளவிலான என்.சி.சி. மாணவிகள் மலையேற்ற பயிற்சி முகாம்

தினமும் 12 கி.மீ. தூர நடைபயிற்சி வழங்கப்படுகிறது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் அகில இந்திய அளவில் என்.சி.சி. (தேசிய மாணவர் படை) மாணவிகள் மலையேற்ற பயிற்சி முகாம் ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவிகள் கலந்துகொள்வார்கள். என்.சி.சி. மாணவிகளுக்கு ஒழுக்கம், நன்னடத்தை, தைரியம், நாட்டுப்பற்று, கட்டுப்பாடு. மற்ற மாநிலங்களின் கலாசாரம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் சிறந்த குடிமக்களாக உருவாவது ஆகியவை குறித்து பயிற்சி அளிப்பது முகாமின் நோக்கமாகும்.

இதன் ஒரு பகுதியாக நடப்பு ஆண்டிற்கான என்.சி.சி. மாணவிகள் மலையேற்ற பயிற்சி முகாம் ஊட்டியில் கடந்த 6-ந் தேதி தொடங்கியது. இதில் தமிழ்நாடு, மராட்டியம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கோவா, கேரளம், புதுச்சேரி மாநிலங்கள் மற்றும் அந்தமான், லட்சத்தீவுகளை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி என்.சி.சி. மாணவிகள் 525 பேர் கலந்து கொண்டு உள்ளனர்.

ஊட்டி அருகே முத்தோரை பாலாடாவில் உள்ள ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட பள்ளியில் தங்கி இருந்து மலையேற்ற பயிற்சியை தொடங்கி உள்ளனர். இதற்கு மண்டல கமாண்டர் கர்னல் ராமநாதன் தலைமை தாங்கினார். தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, ரேடியோ வானிலை ஆய்வு மையம், பழங்குடியினர் ஆய்வு மையம், ரெயில் நிலையம், எம்.ஆர்.சி. ராணுவ மையம் உள்பட பல்வேறு இடங்களை பார்வையிட்டு வருகின்றனர். மேலும் ஸ்ட்ராபெரி, கேரட் விவசாய முறைகளை பார்வையிட்டனர். தினமும் 12 கி.மீ. தூர நடைபயிற்சி வழங்கப்படுகிறது.

முகாமிற்கான ஏற்பாடுகளை நீலகிரி மாவட்ட கமாண்டர் கர்னல் சித்து, என்.சி.சி. முதன்மை அலுவலர் சுப்பிரமணியன் ஆகியோர் செய்து வருகின்றனர். இந்த முகாம் வருகிற 13-ந் தேதி வரை நடக்கிறது. 2-வது குழுவின் முகாம் 16-ந் தேதி தொடங்கி 23-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில் வடமாநிலங்களை சேர்ந்த குழுவினர் பங்கேற்க உள்ளனர்.